தமிழக அமைச்சரவையில், 'அதிகாரமிக்கவர்' என்ற பெயரெடுத்தவர்; ஜெ., மறைவுக்கு பின், ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடந்த போது, தாங்கிப்பிடித்தவர்களில் ஒருவர்; கட்சியினருடன் இணக்கமாக பேசி, கூட்டணியை இறுதி செய்ததில், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணிக்கு முக்கிய பங்குண்டு.நம் நாளிதழின் தேர்தல் களத்திற்கு அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க.,வில் இருந்து அ.ம.மு.க., சென்ற, எம்.எல்.ஏ., ராஜவர்மன், தனக்கு, 'சீட்' கிடைக்காமல் போனதற்கு, அமைச்சர் வேலுமணியே காரணம் என்கிறாரே?
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பாக செயல்படுகிறார். கடந்த முறை, அவர் வற்புறுத்தி தான், ராஜவர்மனுக்கு 'சீட்' வாங்கிக் கொடுத்தார். அவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்திருந்தால் பிரச்னையில்லை. ராஜவர்மனுக்கு, 'சீட்' கொடுங்க என நான் பேச முடியாது. சம்பந்தமில்லாத மாவட்டத்துக்குள் நுழைந்து, இவருக்கு 'சீட்' கொடுங்க; அவருக்கு, 'சீட்' கொடுங்க என சொல்வதில்லை. அவர் விஷயத்தில் நான் தலையிடவில்லை.
தொகுதியில், இஸ்லாமியர்களுக்காக கபர்ஸ்தானம் கட்டிக் கொடுத்தீர்கள். இருந்தாலும், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்திருப்பதால், விலகிச் செல்வதாக சொல்கிறார்களே?
எனக்கு மட்டுமல்ல; அ.தி.மு.க., அரசுக்கும் இஸ்லாமியர்கள் ஆதரவாக இருக்கிறார்கள். கொள்கை வேறு; கூட்டணி வேறு என, முதல்வர் தெளிவாக சொல்லியிருக்கிறார். கொள்கைகளை எந்த காலத்திலும், விட்டுக் கொடுத்ததில்லை. சிறுபான்மையினர் பாதுகாப்பை தெளிவாக கடைப்பிடிக்கிறோம். இதில், நாங்கள் தெளிவாக இருப்பதை அவர்கள் நம்புவதால், முழுமையான ஒத்துழைப்பு எங்களுக்கு இருக்கிறது.
தி.மு.க.,வினர், உங்கள் மீது மட்டுமே ஊழல் குற்றச்சாட்டு கூறி வருவது ஏன்?
தி.மு.க.,வினர் என்று சொல்வதை விட, ஸ்டாலின் தான் சொல்கிறார். 2011ல் தொழில்துறை அமைச்சரானேன். 2014ல் உள்ளாட்சித் துறை அமைச்சர், சட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சராக இருந்தேன். இந்த குற்றச்சாட்டை, 2017ல் வைக்கிறார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழித்து வைக்கிறார். அ.தி.மு.க., ஆட்சியை கலைத்து, குறுக்கு வழியில் முதல்வராக பார்த்தார். நானும், தங்கமணியும் சேர்ந்து, சில நடவடிக்கைகள் எடுத்து அதை தடுத்தோம். நியாயமாக ஆட்சி நடப்பதை உணர்ந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர் எங்களுக்கு ஆதரவு கொடுக்கும் சூழல் வந்தது. ஆட்சியை காப்பாற்றுவதில், நான் உறுதியாக இருந்ததால், என் மீது கோபம். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை, ஸ்டாலின் சுமத்துகிறார். உள்ளாட்சித் துறை அமைச்சராக பலரும் இருந்திருக்கின்றனர். எந்த வேலையும் செய்யாத அமைச்சராக இருந்தவர் ஸ்டாலின் மட்டும் தான். அவருக்கு எந்த வேலையும் தெரியாது. நாங்கள் உண்மையை பேசுகிறோம். நியாயப்படி, மனசாட்சிப்படி செயல்படும் வகையில், எங்களை உருவாக்கி இருக்கின்றனர்.
'கொரோனா' பரவல் காலத்தில் பிளீச்சிங் பவுடர், துடைப்பம் உள்ளிட்ட பொருட்கள் வாங்கியதில், ஊழல் நடந்திருப்பதாக சொல்கிறார்களே...
யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து பேசுகிறார். 12 ஆயிரத்து, 600 ஊராட்சிகள் என, அவர் சொன்னார். ஒரு ஊராட்சிக்கு, 1 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்றார். தமிழகத்தில் எத்தனை ஊராட்சி இருக்கிறது என்றே தெரியாமல், ஐந்து ஆண்டுகள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அதுதான், மிகப்பெரிய வேடிக்கை. தமிழகத்தில், 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளே இருக்கிறது. சில ஊராட்சிகளில் சம்பளம் கொடுப்பதே சிரமம். 5 லட்சம்; 10 லட்சம் பார்ப்பதே பெரிது. பஞ்சாயத்து நிலையே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.
ஊராட்சிகளுக்கே சில அதிகாரம் இருக்கிறது. தேவையானதை வாங்கிக் கொள்ளலாம். 2,000 ரூபாய்க்கும், 'டிவி' இருக்கு; லட்சக்கணக்கான ரூபாய்க்கும், 'டிவி' இருக்கு. பொருளின் தரம், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டே வாங்குவார்கள். கொள்முதலுக்கு சம்பந்தமில்லை. அவர், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது, சென்னை மாநகராட்சியில், 73 சதவீதம் அதிகமாக, வேலை கொடுத்திருக்கிறார். அதெப்படி கொடுத்தார்? ஆதாரமில்லாமல், வன்மத்துடன், புள்ளிவிபரம் தெரியாமல் பேசுகிறார். எந்த தவறும் நடக்கலை.ஊழல் குற்றச்சாட்டு சொல்ல, அவருக்கு தகுதி இல்லை.
ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது தெரியும். அரசியலில் நியாயமாக, தர்மமாக பேசக்கூடிய ஒருத்தர், நாங்கள் மதிக்கக்கூடிய ஒருத்தர் இருக்கார்; அவர், அண்ணன் வைகோ. அவர் எப்போதும் நியாயமா பேசுவார். ஒரு லட்சத்து, 76 ஆயிரம் கோடி ரூபாயில், ஒரு லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களாக, பணமாக ஸ்டாலினிடம் இருக்கிறது; அதற்கான ஆதாரம் இருப்பதாக பேசியிருக்கிறார். தங்கை கனிமொழியை ஜெயிலுக்கு அனுப்பி விட்டு, சொத்துக்களை சுருட்டி விட்டாருன்னு சொல்லியிருக்கிறார்.சாதிக்பாட்சா இறந்ததிலும், சம்பந்தம் இருக்கு. அவர் தான் காரணம் என, வைகோ சொல்லியிருக்கிறார். இதற்கு பதில் சொல்லச் சொல்லுங்கள். அவர், கூட்டணியில் தானே இருக்கிறார்.
திருவாரூரில் இருந்து எப்படி வந்தார்கள். இப்போது. உலக பணக்காரர்களாக இருக்கிறார்கள்; இவ்வளவு சொத்து எங்கிருந்து வந்தது? அவருடைய மகன் உதயநிதி, பல நுாறு கோடி ரூபாய் செலவில் படம் எடுக்கிறார். இதெல்லாம், மக்களுக்கு தெரியும். ஊழலை பத்தி பேச, அவருக்கு தகுதி இருக்கிறதா.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த, 13 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து வழக்கு நடக்கிறது; 'ஸ்டே' வாங்கியிருக்கிறார்கள்.எங்கள் மீது அப்படியில்லை; பொய்யான குற்றச்சாட்டு சொல்லி இருக்கிறார்கள்; வழக்கு நடந்து வருகிறது. தி.மு.க.,வில் விஞ்ஞான ரீதியா ஊழல் செய்வாங்கன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி, ஸ்டாலின் எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு, தப்பிப்பாரு.
கோவையில் நடந்த ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு, உங்கள் கட்சியை சேர்ந்த பெண்ணை அனுப்பி, சண்டைக்கு வழிவகுத்தது நீங்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்ததே?
முதல்வராக இ.பி.எஸ்., இருக்கிறார். முதல்வராக போவதாக ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். முதல்வருடன் அவரால் போட்டி போட முடியாது. முதல்வருக்கு ஸ்டாலின் சமம் அல்ல. என்னுடன் தான் போட்டி போட முடியும்.கிராம சபை கூட்டத்தில், என் மீது அபாண்டமாக கூறிய புகாருக்கு, அந்தப் பெண் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க.,வினர் பெண்களை அடிப்பது வழக்கம். நீங்கள் போனது தவறு; போயிருக்கக் கூடாது என, கண்டித்தேன். நான் அனுப்புவதாக இருந்தால், என் தொகுதியில், என் ஏரியாவில் ஒருத்தரையா அனுப்புவேன். இந்த லாஜிக்கே புரியாமல் பேசிக்கிட்டு இருக்கிறார்.
கொரோனா காலத்தில், உங்கள் தொகுதியை தாண்டி, அனைத்து தரப்பினருக்கும் உதவி செய்தீர்கள். 'டுவிட்டர்' வாயிலாக, உதவி கேட்டவர்களுக்கும் செய்து கொடுத்தீர்கள். அதெல்லாம் ஓட்டுகளாக மாறுமா?
ஓட்டுக்காக கொடுக்கவில்லை; தேர்தலுக்காக செய்தது இல்லை. உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா தொற்று நோய் பரவிய நேரம். எந்த நேரத்திலும், அவர்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதற்காக செய்த உதவி.அந்த நேரத்தில், தி.மு.க., - எம்.பி.,க்கள், 39 பேரும் எங்கேயும் எட்டிப்பார்க்கவில்லை. அக்கட்சி தலைவரும், ரூமுக்குள்ளேயே வீடியோ கான்பரன்சில் பேசிக் கொண்டு இருந்து விட்டார்.
தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்க்காததால், அ.தி.மு.க.,வுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்துவோம் என, பிரேமலதா சொல்லியுள்ளாரே...
கூட்டணியில் அவர்கள் இருந்தார்கள் என்பதால், விமர்சனம் செய்ய தயாராக இல்லை. பொறுமையாக இருந்திருந்தால், கூட்டணியில் அவர்கள் இருந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். பத்திரிகையில் சிலர் பேசியதாலும், சூழல் மாறியது. அவர்கள் தனியாக நிற்பதால், எங்கள் கட்சிக்கோ, கூட்டணிக்கோ பாதிப்பில்லை.
தினகரன் முன்பெல்லாம், உங்களை தாக்கிப் பேசுவார். சமீபகாலமாக, அப்படி ஏதும் பேசுவதில்லை. உங்களுக்கும், அவருக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருக்கிறதா?
ரகசிய ஒப்பந்தம் ஏதுமில்லை. கட்சிக்கு இரட்டை இலை சின்னம் உள்ளது. முதல்வர், துணை முதல்வர், கட்சியை வழிநடத்துகின்றனர். ஜெ., இருந்தபோது, கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர் தினகரன். அதோடு முடிந்து விட்டது. அவருடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை. கட்சி எங்கிருக்கிறதோ, நாங்கள் அங்கிருக்கிறோம்.
கோவையில், மாவட்டம் முழுவதும், உங்கள் சொல்படி கேட்கும் அதிகாரிகளை மட்டுமே, பணியில் அமர்த்தி உள்ளீர்களாமே...
தேர்தலுக்கு, கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் தயவு எனக்கு தேவையில்லை. பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி, அவர்களை மாற்றியுள்ளனர். இது, அ.தி.மு.க., கோட்டை. குறுக்கு வழியில் முதல்வராக நினைக்கும், ஸ்டாலின் கனவு பலிக்காது. கோவைக்கும், ஆர்.எஸ்.பாரதிக்கும் என்ன சம்பந்தம். அவரும், ஐந்து எம்.பி.,க்களும் புகார் செய்து, அவர்களை மாற்றியுள்ளனர். ஐந்து எம்.பி.,க்கள் புகார் சொல்லும் அளவுக்கு, கலெக்டர் என்ன செய்தார் என, தெரியவில்லை. கொரோனா காலத்தில், நன்றாக பணியாற்றிய அதிகாரிகள். அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு சொல்லி, மாற்றியிருக்கிறார்கள் என்றால், அவர்களை மக்கள் புறக்கணிப்பர்.
கோவையில் தான் எங்களுக்கு செல்வாக்கு அதிகம். கூடுதல் இடம் ஒதுக்க வேண்டுமென, பா.ஜ., கேட்டும், மறுத்து விட்டீர்களாமே?
இதெல்லாம் புரளி; தி.மு.க.,வினர் கிளப்பி விடுவது. ஒவ்வொரு கட்சிக்கும், எவ்வளவு ஓட்டு வங்கி இருக்கிறது என்பதை பார்த்து, முதல்வர், துணை முதல்வர், 'சீட்' ஒதுக்கினர். என்னுடைய ரோல் எதுவும் இல்லை. 'சீட்' ஒதுக்கியதில், சில தொகுதிகள் கொடுக்க முடியும்; கொடுக்க முடியாமல் போகும். தொகுதி பங்கீட்டில், எங்களுக்கும் திருப்தி; அவர்களுக்கும் திருப்தி.
கோவை தெற்கு தொகுதியை, மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுத்து, பா.ஜ., பெற்றதாக கூறுகிறார்களே...
அவர்களும் கேட்டார்கள். மாவட்ட செயலருக்காக கேட்டோம். யார் நின்றாலும் நாங்கள் வேலை செய்கிறோம்.
கோவை தெற்கு தொகுதி கைவிட்டு போனதும், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனனுக்காக, வேறு தொகுதி வாங்கிக் கொடுத்தீர்கள். மற்றவர்களுக்காக அவ்வாறு முயற்சி செய்யலையே...
மாவட்ட செயலருக்கு ஏதாவது ஒரு தொகுதி கொடுப்பது, எம்.ஜி.ஆர்., காலம் முதல் வழக்கம். அதே தொகுதி கிடைக்காவிட்டால், மாற்றிக் கொடுப்பர்.
ஜெ., ஆட்சி காலம்; இ.பி.எஸ்., ஆட்சி காலம் ஒப்பிடுங்களேன்...
ஜெயலலிதா அற்புதமாக ஆட்சி செய்தார். அவர் செய்ய நினைத்ததை, முதல்வர் இ.பி.எஸ்., செய்கிறார். எளிமையானவராக இருக்கிறார். ஜெ., அறிமுகப்படுத்திய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துகிறார். இன்று மக்களிடம் சின்ன எதிர்ப்பு கூட இல்லை. எதிர்ப்பு அலை ஏதுமில்லை. எல்லா பகுதியிலும், இ.பி.எஸ்., ஆதரவு அலை இருக்கு.
அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், உங்களுக்கு சபாநாயகர் பொறுப்பு வழங்கப்படும் என, பரவியிருக்கும் செய்தி குறித்து...
சம்பந்தமில்லாத கேள்வியா இருக்கு. இது, யார் சொன்னதுன்னு தெரியலை. என்னை பொறுத்தவரை, பதவிக்கு முக்கியத்துவம் தருவதில்லை. பதவியை விரும்பி போனதில்லை. என்னை ஜெ., கூப்பிட்டு பதவி வழங்கினார். மாவட்ட செயலர் பொறுப்பு கொடுத்த போது கூட, சீனியர்கள் இருக்கிறார்களே எனக்கூறி மறுத்தேன். செயல்பாட்டுக்காக, விசுவாசத்துக்காக கொடுத்தார்கள்.
டென்ஷன் அதிகமானால், 'செல்ப் டிரைவிங்' செய்து, நீண்ட துாரம் பயணம் மேற்கொள்வீர்கள் என சொல்கிறார்களே... அப்படி செய்தால், டென்ஷன் குறையுமா, என்ன?
அப்படி ஒரு சம்பவமே நடக்கலை. கொரோனா காலத்தில், சென்னையில் இருந்து கோவைக்கு, ஆறு மணி நேரத்தில் வந்தோம். டிரைவர் தான், கார் ஓட்டினார். ரோட்டில் வேறு வாகனங்கள் ஓடாததால், விரைவாக வர முடிந்தது.இளைஞரணி செயலராக இருந்தபோது, சென்னையில் இருந்து கோவைக்கு கார் ஓட்டிட்டு வந்தேன். 2006ல் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, திருப்பதிக்கு சென்றோம். இப்போ, அத்தகைய சூழல் இல்லை.டென்ஷன் ஆக கூடிய வாய்ப்பில்லை. டென்ஷன் குறையும் என்றால், இனி முயற்சி செஞ்சு பார்க்க வேண்டியது தான். எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்கிறோம்; பக்குவத்துக்கு வந்துட்டோம்.
ஒருவேளை அ.தி.மு.க., தோற்றால், அ.ம.மு.க.,வை இணைக்க வாய்ப்பு உள்ளதா?
அத்தகைய சூழலே களத்தில் இல்லை. உறுதியாக, மீண்டும் முதல்வராக இ.பி.எஸ்., பொறுப்பேற்பார். இதில், எந்த மாற்றமும் இல்லை. 100க்கு, 100 'பர்சன்டேஜ்' உறுதி. எதிர்க்கட்சி தலைவராக வருவதற்கு ஸ்டாலின் முயற்சிக்கலாம்.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக,அ.தி.மு.க., வினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதே?
தமிழகம் முழுதும், தி.மு.க.,வினர் தான் முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் உங்கள் பெயரை பயன்படுத்தி, ஆட்சி அதிகாரத்தில், உங்களது சகோதரர்கள், உறவினர்கள் தலையிடுவதாக குற்றச்சாட்டு இருக்கிறதே?
தி.மு.க.,வினரே அப்படி கிளப்பி விடுகின்றனர். அந்த மாதிரி சூழல் இல்லைன்னு மக்களுக்குத் தெரியும். பல்வேறு வேலைகளில் இருக்கும் போது, கட்சி நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் நிகழ்வுக்கு செல்ல முடியாது. கோவையில் இருந்தால் சென்று விடுவேன். சென்னையில் இருக்கும் போது, சகோதரர் செல்வார். அதை தவிர, வேறெதுவும் இல்லை. நான் அமைச்சராக வந்த பிறகே, கோவையில் கட்டப்பஞ்சாயத்து இல்லை; நில அபகரிப்பு இல்லை; கடைகள், தொழிற்சாலைகளில் வசூல் இல்லை. சட்டம் - ஒழுங்கு நன்றாக இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது.
ஐந்தாண்டுகளில் கோவை மாவட்டத்திற்கு, அ.தி.மு.க., அரசு செய்தது என்ன?
அ.தி.மு.க., ஆட்சியில், ஐந்தாண்டில் கோவை மாவட்டம், பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது. சாலை கட்டமைப்பு, பாலங்கள், குடிநீர் வசதி, புதிய அரசு கல்லுாரிகள், ஒருங்கிணைந்த பஸ் நிலையம், அரசு மருத்துவமனை மேம்பாடு, விமான நிலைய விரிவாக்கம், ஏழைகளுக்கு புதிய வீடுகள் என, எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இத்தேர்தலில், சாமானியர் நாட்டை ஆள வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டனர். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில், அனைத்து தொகுதியிலும், அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்.
சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக சொல்லி இருக்கிறார்; அதெல்லாம் நாடகமா?
அப்படி நினைக்க முடியாது. அவரது அறிக்கையை படித்தேன். ஜெ.,வுடன் பயணித்தவர். ஜெ., உருவாக்கிய ஆட்சி; இ.பி.எஸ்., சிறப்பாக செயல்படுகிறார். தி.மு.க., எதிரி. தி.மு.க., வரக்கூடாது. அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைத்து, அறிக்கை வெளியிட்டதாக நினைக்கிறேன்.மறைந்த எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகி, ஜெ.,விடம் கட்சியை இணைத்து விட்டு ஒதுங்கினார். அந்த அடிப்படையில், நல்ல எண்ணத்துடன் செயல்பட்டு இருக்கிறார் என, நினைக்கிறேன். அதற்குள் போக வேண்டியதில்லை. நல்ல விதமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், வேலுமணி ஜெயிலுக்கு போவது உறுதி என, ஸ்டாலின் பகிரங்கமாக பேசினாரே?
நீதிபதி பதவியையும், அவர் எடுத்துட்டார் போலிருக்கு. சாற்றப்பட்ட குற்றமே, ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. அவர் ஆட்சிக்கு வரக்கூடிய சூழலே இல்லை. அவர் குற்றம்சாட்டிவிட்டால், குற்றவாளிகளா?டெண்டர் விடாத ஒரு பணி தொடர்பாக, கவர்னரிடம் புகார் கொடுத்தார். ஒரே மேடையில் விவாதிக்க, துண்டுச்சீட்டு இல்லாமல் வாங்க என, முதல்வர் அழைத்தாரே. ஸ்டாலின் வரவேண்டியது தானே.தி.மு.க.,வினரின் உருட்டல், மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். எந்தக் காலத்திலும் ஸ்டாலின் ஆட்சிக்கு வர முடியாது. ஆட்சிக்கு வரக்கூடிய பக்குவம் அவருக்கு இல்லை.
துணை முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்து, இந்த நாட்டுக்கு ஏதாச்சும் செஞ்சிருக்கணுமே. மத்தியில் காங்., அரசில் அங்கம் வகித்த போது, உரிமை பிரச்னை தீர்க்க வாய்ப்பிருந்தும், தமிழகத்துக்கு ஏதும் செய்யலையே. கையாலாகாத நிலையில், எப்படியாவது ஆட்சியை பிடிக்க நினைக்கின்றனர். தேர்தல் அறிக்கையில் சொன்னதை ஸ்டாலின் நிறைவேற்ற மாட்டார். கடந்த, 2019ல் வெற்றி பெற்ற, 39 எம்.பி.,க்களும் வேஸ்ட். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இரண்டு வருஷமா, தொலைந்து போய் விட்டார்கள். இவ்வாறு, அவர் கூறினார்.
வாசகர் கருத்து