'பிரதமர் மோடி முதல் தொண்டர் வரை கட்சிக்கும் கொள்கைக்கும் அர்ப்பணிப்போடு உழைக்கின்றனர்'
'பொது தொகுதியில் நான் போட்டியிடும் காலம் வரும்' என்று உறுதியாக
சொல்லும் திருமாவளவன், தான் சிதம்பரம் எம்.பி.,யாக தன் கடமையை செம்மையாக
செய்துள்ளதாக, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில்
சொல்கிறார். இது தொடர்பாக நம் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
கடந்த 10 ஆண்டுகள் சிதம்பரம் தொகுதி எம்.பி.,யாக இருந்திருக்கிறீர்கள். உங்களது சாதனையாக எதை சொல்வீர்கள்?
தொகுதி
வளர்ச்சி நிதியாக ஆண்டுக்கு ஒதுக்கப்படும் 5 கோடியில் குடிநீர் தொட்டிகள்,
சாலைகள், பள்ளி வகுப்பறைகள், சுற்றுச்சுவர் என மக்களுக்கு தேவையான
அடிப்படை வசதிகளை செய்திருக்கிறேன். ஒரு எம்.பி., என்ன பொறுப்புணர்வுடன்
செயல்பட வேண்டுமோ, அந்த பொறுப்புணர்வுடன் கடமையாற்றியுள்ளேன்.
ஒற்றை
எம்.பி., கொண்ட கட்சிக்கு பார்லிமென்டில் பேச அவ்வளவு எளிதாக வாய்ப்பு
கிடைக்காது. ஆனாலும், 69 முறை விவாதங்களில் பங்கேற்று பேசியிருக்கிறேன்.
மூன்று நிமிடங்கள் பேசுவதற்கு, ஐந்து மணி நேரம் காத்திருந்து இருக்கிறேன்.
குடியுரிமை சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்க சட்டம், மகளிர் இட
ஒதுக்கீடு சட்டம், சமூக நீதி, மாநில உரிமைகள், பெண் உரிமைகள், மொழி
விவகாரம், ஈழத் தமிழர் பிரச்னை தொடர்பான சட்டங்கள், விவாதங்களில்
விளிம்புநிலை மக்களின் குரலாக பார்லிமென்டில் ஒலித்திருக்கிறேன்.
இதுதான் ஒரு எம்.பி.,யின் கடமை. அந்த கடமையை சரியாக செய்திருக்கிறேன் என்ற மனநிறைவு எனக்கு இருக்கிறது.
பிரதமர் மோடி அரசில் இருக்கும் முக்கியமான மூன்று குறைகள் என்ன?
கடந்த
10 ஆண்டுகளாக இந்தியாவை ஆளும் அரசை, மோடி அரசாக, பா.ஜ., அரசாக மட்டும்
நான் பார்க்கவில்லை. இது, ஆர்.எஸ்.எஸ்., - வி.எச்.பி., பஜ்ரங்தல் போன்ற சங்
பரிவார் அமைப்புகளின் அரசாகவே பார்க்கிறேன். மதச்சார்பின்மை என்ற
அரசியலமைப்பு சட்டத்தின் உயிர்மூச்சான அம்சத்தை நீர்த்துப் போகச் செய்வது
தான் சங் பரிவாரின் நோக்கம். மதச்சார்பின்மையை தகர்க்கவே குடியுரிமை
சட்டத்தை கொண்டு வந்தனர். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கினர்.
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி சமூக நீதியை தகர்த்து
உள்ளனர்.
அரசியலமைப்பு சட்டத்தை முற்றிலும் மாற்றியமைத்து, இந்து
ராஷ்டிரம் என நாட்டின் பெயரை மாற்றி, வாரணாசியை தலைநகராக்குவது தான் சங்
பரிவாரின் திட்டமாக உள்ளது. மறுபக்கம் பொதுத்துறை நிறுவனங்களை
தனியார்மயமாக்கி வருகின்றனர். அனைத்தும் கார்பரேட்மயமாகி வருகிறது. இப்படி,
100 சதவீதம் சனாதனமயமாதல், கார்ப்பரேட்மயமாதல் ஆகியவற்றை பெரும் அபாயமாக
பார்க்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில், ஒரு நல்ல விஷயம்கூட உங்களுக்கு தென்படவில்லையா?
எந்த
கொள்கையை ஏற்றுக் கொண்டானரோ அந்தக் கொள்கைக்கு உண்மையாக, கடுமையாக
உழைக்கின்றனர். பிரதமர் மோடி முதல் கடைக்கோடி தொண்டர் வரை அனைவரும்,
கட்சிக்கும் கொள்கைக்கும் கட்டுப்பட்டு அர்ப்பணிப்புடன் உழைக்கின்றனர்.
பா.ஜ.,விடம் இருந்து அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். இதுதான்
அவர்களிடம் உள்ள நல்ல விஷயமாக பார்க்கிறேன்.
ராம்விலாஸ்
பாஸ்வான், ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட தலித் தலைவர்கள் பா.ஜ.க.,வுடன்
கூட்டணி அமைத்தனர். மோடி அமைச்சரவையிலும் இருந்தனர். ஆனால், பா.ஜ.க.,
எதிர்ப்பில் நீங்கள் உறுதியாக இருப்பது ஏன்?
அம்பேத்கர்,
ஈ.வெ.ரா., கொள்கைகளை புரிந்து கொண்டதால் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த
எதிர்பார்ப்பும் இல்லை. கொள்கையில் சமரசம் செய்து கொண்டு எந்த பதவியையும்
பெறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
நான் சனாதன எதிர்ப்பில் உறுதியாக
இருக்கிறேன். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாசாரம் என
பன்முகத்தன்மைக்கு எதிராக, மதச்சார்பின்மைக்கு எதிராக, கூட்டாட்சிக்கு
எதிராக செயல்படும் பா.ஜ.,வுடன் நான் எப்படி இணைந்து செயல்பட முடியும்?
தனிப்பட்ட முறையில் பா.ஜ., மீது வெறுப்பு எதுவும் இல்லை.
சனாதனம் என்பது இப்போது பெரும் சர்ச்சையாகி உள்ளதே...
நாங்கள்
சொல்லும் சனாதனம் என்பது ஹிந்து மதம் அல்ல. ஹிந்து கடவுள் வழிபாடு, அது
சார்ந்த சடங்குகள் என்பவை மக்களின் நம்பிக்கை. அதற்கு நாங்கள் எதிரி அல்ல.
பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வை போதிக்கும் கோட்பாட்டை தான் சனாதனம்
என்கிறோம். அதை எப்போதும் எதிர்ப்போம்.
பிரதமர் மோடி, அம்பேத்கரை
பெரிதும் கொண்டாடுகிறாரே? பிற்பட்ட மக்களை வென்ற பா.ஜ., அடுத்து பட்டியலின
மக்களை நோக்கி நகர்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா? இது எடுபடுமா?
அம்பேத்கர்
எழுதிய அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்து வரும் மோடி அரசு,
அம்பேத்கரை கொண்டாடுவதன் பின்னணியில் வலுவான அரசியல் ஆதாயங்கள்
இருக்கின்றன. அம்பேத்கரின் செல்வாக்கு நாடு முழுதும் 25 சதவீத மக்களோடும்,
பெரிய ஓட்டு வங்கியோடும் தொடர்புடையது என்பதால் அவரை கொண்டாடுகின்றனர்.
அவரை எதிர்த்தால் மத மாற்றங்கள் அதிகரிக்கும்.
அதனால்தான்
அம்பேத்கரை ஹிந்துத்துவ தலைவராக 'ஸ்வாகா' செய்ய பார்க்கின்றனர். எனவே,
அம்பேத்கரோடு தொடர்புடைய இடங்களை நினைவிடமாக்கியுள்ளனர். இது முழுக்க
முழுக்க அரசியல் உள்நோக்கம் உடையது.
தமிழகத்தில், 55 ஆண்டுகளுக்கும்
மேலாக திராவிட கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. ஆனால், பட்டியலின மக்களுக்கு
தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளிலும், ஆட்சியிலும் முக்கியத்துவம்
கிடைக்கவில்லையே, ஏன்? தி.மு.க., அமைச்சரவையில் பட்டியலினத்தவர்களுக்கு
முக்கிய துறைகள் ஒதுக்கப்படவில்லையே...
பட்டியலின மக்கள் அரசியல்
சக்தியாக அணி திரள்வதும், அதிகாரத்திற்காகப் போராடுவதும் அண்மைகால
முயற்சியாகவே உள்ளது. நீண்டகால முயற்சியாக இல்லை. பா.ம.க., நிறுவனர்
ராமதாசுக்கு 50 ஆண்டுகள் முன்பாகவே, வன்னியர் சமுதாய தலைவர்களான ராமசாமி
படையாச்சியார், மாணிக்கவேல் நாயக்கர் போன்ற தலைவர்களின் கட்சிக்கு 10, 15
எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர்.
ஜாதி வேண்டாம் என்பதில் உறுதியாக
இருப்பதால், பட்டியலின மக்களால் சமூக ரீதியான அரசியல் சக்தியாக உருவெடுக்க
முடியவில்லை. தமிழகத்தில் தோன்றிய எம்.சி.ராஜா, இரட்டைமலை சீனிவாசன்,
அயோத்திதாச பண்டிதர் உள்ளிட்ட பட்டியலின சமுதாய தலைவர்கள் ஜாதி
ஒழிப்பில்தான் கவனம் செலுத்தினர். ஜாதி அடிப்படையில் பட்டியலின மக்களை
ஒருங்கிணைக்கவில்லை.
மற்ற கட்சிகளில் தலைவர்கள் உருவானால் அவர்களை
யாரும் ஜாதி அடையாளத்தோடு பார்ப்பதில்லை. ஆனால், பட்டியலினத்தில் இருந்து
ஒருவர் உருவானால் ஜாதி அடையாளத்தோடு பார்க்கும் வழக்கம் இங்கிருக்கிறது.
பட்டியலின மக்கள் அரசியல் அதிகாரம் பெறும் காலம் கண்டிப்பாக வரும்.
வி.சி.,
கட்சி அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்?
பிரதமர் வேட்பாளர் இல்லாமல் போட்டியிடுவது வெற்றியை பாதிக்காதா?
பிரதமர்
வேட்பாளர் யார் என்பதை வைத்து மக்கள் ஓட்டளிப்பர் என்பது தவறான எண்ணம்.
ஒரு காலத்தில் தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தின. இப்போது இந்திய அரசியலை
தீர்மானிக்கும் சக்திகளாக மாநில கட்சிகள் மாறியுள்ளன. தேசிய கட்சிகள் தான்
மாநில கட்சிகளை தேடிச்சென்று கூட்டணி வைக்கின்றன. தி.மு.க., கூட்டணியில்
தான் காங்கிரஸ் இருக்கிறது. பா.ம.க.,வை தேடிச்சென்று பா.ஜ., கூட்டணி
வைக்கிறது.
எனவே, மாநில கட்சிகள் முன்கூட்டியே முடிவு செய்து
ஒருவரை பிரதமராக அறிவிக்க முடியாது. பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக
இருப்பதால் ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடிகிறது. இண்டியா
கூட்டணியில் எந்தக் கட்சியும் தனிப்பெரும் கட்சியாக இல்லை. பல கட்சிகள்
ஒன்றுசேர்ந்து ஒருமுகமாக காட்ட முயற்சித்து வருகிறோம். தேர்தலுக்கு பின்
பிரதமரை முடிவு செய்வோம்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், சொற்ப
ஓட்டு வித்தியாசத்தில் தான் உங்களால் வெற்றிபெற முடிந்தது. அப்போது மோடி
எதிர்ப்பலை இருந்தது. அதே நேரம் எதிர்க்கட்சிகளும் பலவீனமாக இருந்தன. இந்த
முறையும் அதே சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறீர்கள். கள நிலவரம் எப்படி
இருக்கிறது?
இப்போதும் மோடி எதிர்ப்பலை இருக்கிறது. முன்பைவிட
எதிர்க்கட்சிகள் பலவீனமாக தான் இருக்கின்றன. அதனால் சிதம்பரம் தொகுதி
மட்டுமல்ல, தமிழகம் முழுதும் கள நிலவரம் இண்டியா கூட்டணிக்கு சாதகமாகவே
உள்ளது. அதனால் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்.
பா.ஜ., - பா.ம.க., கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள். அது உங்களுக்கு சவாலாக அமையுமா?
மதவாத,
ஜாதியவாத கட்சிகள் கைகோர்த்திருக்கின்றன. பா.ஜ.,வுடன் சேர யாரும்
முன்வராததால் பா.ம.க.,வை கடத்தி வந்து விட்டனர். தமிழகத்தில் ஓட்டு வங்கியை
அதிகரிக்கவே இதுபோல பா.ஜ., செய்கிறது. அவர்கள் தோற்பதற்காக தேர்தலில்
நிற்கின்றனர். அதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
தமிழகத்தில்
நீங்கள் நன்கு அறிமுகமான முகம். உங்களை தெரியாதவர் இல்லை.
சிறுபான்மையினருடன் நல்ல இணக்கத்தில் உள்ளீர்கள். தனி தொகுதியை விட்டு பொது
தொகுதியில் போட்டியிடாததற்கு என்ன காரணம்?
நான் பொதுத் தொகுதியில் போட்டியிடும் காலம் கண்டிப்பாக வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து