மோடியா... ஸ்டாலினா என பார்த்துவிடலாம்: உதயநிதி சவால்
"கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு எதையும் செய்யவில்லை. தேர்தலுக்கு தேர்தல் மட்டும் தான் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்" என. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.
ராமநாதபுரத்தில் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்துக்கு மத்திய அரசு எதாவது செய்ததா. 10 வருடத்தில் பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகத்துக்கு வந்தார். தேர்தலுக்கு தேர்தல் மட்டும் தான் வருகிறார். ஒருமுறை, எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். அந்த ஒரு கல்லையும் நான் எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தார். தமிழகத்தின் நலன் மீது அவருக்கு உண்மையான அக்கறை இருந்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய புயல், மழை பாதிப்பின்போது வந்து பார்த்தாரா?
முதல்வர் கேட்ட வெள்ள நிவாரண நிதியை கொடுத்தாரா. புதிய கல்விக் கொள்கை மூலம் தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கப் பார்க்கிறார்கள். புதிய கல்விக் கொள்கை வந்தால், எட்டாம் வகுப்பு மாணவர்கள் கூட பொதுத்தேர்வை எழுத வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து வரியாக மட்டும் ஆறரை லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நமக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் தான் கிடைத்தது. நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் 28 பைசாவை திருப்பிக் கொடுக்கின்றனர். இனி அவரை 28 பைசா மோடி என்று தான் அழைக்க வேண்டும்.
ஜெயலலிதா இருந்தவரையில் தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை. ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நீட் தேர்வை தடுத்தவர் ஜெயலலிதா. ஆனால், அவர் இறந்த பிறகு பா.ஜ., பேச்சைக் கேட்டு நீட் தேர்வை கொண்டு வந்தார்கள். இதுவரையில் நீட் தேர்வால் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். காஸ் சிலிண்டரின் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும். 2014ல் 450 ரூபாய்க்கு விற்கப்பட்ட காஸ் சிலிண்டரின் விலை 900 ரூபாயாக உயர்ந்துவிட்டது. தேர்தல் வருகிறது என்பதற்காக அதிலும் 100 ரூபாயை மோடி அரசு குறைத்துள்ளது.
மகளிருக்கு விலையில்லா பேருந்து கட்டணம், காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத்தொகை என மூன்று திட்டங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் 1 கோடிப் பேர் மாதம் ஆயிரம் ரூபாயை பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்தில் 1.60 கோடிப் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு விண்ணப்பித்த அனைவருக்கும் திட்டத்தைக் கொண்டு போய் சேர்ப்போம். இது மிக முக்கியமான தேர்தல். எதிர்த்து வெற்றி பெறப் போவது ஸ்டாலினா... மோடியா எனப் பார்த்துவிடலாம்.
ஜூன் 3ம் தேதி கருணாநிதியின் பிறந்தநாள். ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும்போது, 40க்கு 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து