கள்ளக் கூட்டணி நாடகம் நடத்தும் பா.ஜ.,- அ.தி.மு.க., : ஸ்டாலின்
திருச்சியில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தை துவக்கி உள்ளார். " மக்களை எதிர்கொள்ள பயந்து கொண்டு புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை பா.ஜ., ஒடுக்குகிறது" என, ஸ்டாலின் பேசினார்.
தமிழகத்தில் ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, திருச்சி மற்றும் பெரம்பலூரில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் இன்று பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது ஸ்டாலின் பேசியதாவது:
திருச்சி என்றாலே திருப்புமுனை தான். இந்தியாவுக்கே திருச்சி திருப்புமுனையை கொடுக்கும். தமிழகத்துக்கு அடிக்கடி வந்து கொண்டிருக்கிறார், பிரதமர் மோடி. சேலத்தில் அவர் பேசும்போது, 'தான் வருவதால் தி.மு.க.,வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது' என்கிறார்.
சொல்லப்போனால், ஆட்சி அதிகாரம் முடியப் போவதால் பிரதமருக்குத் தான் தூக்கம் போய்விட்டது. அவரிடம், தமிழகத்துக்கு என்னென்ன திட்டங்களை கொடுத்தீர்கள்... வெள்ள நிதியை ஏன் தரவில்லை என எந்தக் கேள்வியை கேட்டாலும் பதில் வருவதில்லை.
பா.ஜ., நாடகம்
தங்களது தோல்விகளை மறைக்கவும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதை மறைக்கவும் தேவையில்லாத விஷயங்களை பேசி திசை திருப்புகிறார். தேர்தலுக்காக பா.ஜ., நடத்தும் கபட நாடகங்களை மக்கள் மறக்க மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள்.
மக்களுக்கான திட்டங்களை சிந்தித்து செயல்படுத்தக் கூடிய அரசாக தி.மு.க அரசு இருக்கிறது. ஆனால், சொல்வதற்கு எதுவும் இல்லாத ஆட்சியை பா.ஜ., நடத்தியது. கடந்த 10 ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சியை நடத்தியதாக மேடைக்கு மேடை பிரதமர் பேசுகிறார்.
பா.ஜ., செய்த ஊழலைப் பற்றி நாடு முழுக்க கேள்விகள் கேட்கப்பட்டாலும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. பா.ஜ., ஊழல்களில் இமாலய எடுத்துக்காட்டு தான், தேர்தல் பத்திர ஊழல். கடந்த ஐந்தாண்டுகளில் ஈ.டி, ஐ.டி, சி.பி.ஐ., என மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கும் புலனாய்வு அமைப்புகளை ஏவி நிதி வசூலித்தனர்.
தேர்தல் நிதியாக மட்டும் 8 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளனர். வரலாற்றில் இப்படியொரு ஊழல் நடந்ததில்லை. துவாரகா கட்டுமான ஊழல் முதல் ஆயுஷ்மான் பாரத் வரையில் 7 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி சுட்டிக் காட்டியது. அதுகுறித்து பா.ஜ., வாயே திறக்கவில்லை.
ஊழலை மறைக்கவே கைது
தேர்தல் பத்திரம் போலவே பி.எம்.கேர்ஸ் என்ற பெயரில் நிதியை வசூலித்தனர். அதற்கும் பதில் இல்லை. அத்தனை ரகசியங்களும் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அம்பலமாகும். ரபேல் ஊழல் ரகசியமும் வெளிவரும். ஊழல் ஆட்சியை நடத்திய மோடி, ஊழலைப் பற்றி பேசலாமா?
பா.ஜ., ஊழலை மறைக்கவே டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளனர். 13 மாதங்களாக மணீஷ் சிசோடியா சிறையில் இருக்கிறார். கடந்த மாதம் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இது பழிவங்கும் நடவடிக்கை இல்லையா?
மோடிக்கு எதிராக இண்டியா என்ற வலுவான கூட்டணி அமைந்தது தான் இதற்கு காரணம். தவறுகளுக்கு மேல் தவறுகளை பா.ஜ., தலைமை செய்து வருகிறது. தி.மு.க.,வுக்கு தொல்லை கொடுக்க கவர்னரை வைத்து மிரட்டிப் பார்க்கிறார்கள்.
கவர்னரின் வாழ்த்து
பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே கவர்னரை கண்டித்தார். அதன் பிறகு இன்று கவர்னரிடம் இருந்து அழைப்பு வந்தது. பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் எடுத்து முடித்த பிறகு இங்கு வந்தேன். ராஜ்பவனில் இருந்து கிளம்பும்போது கவர்னரிடம், 'இன்னைக்கு தேர்தல் பிரசாரத்தை ராஜ்பவனில் இருந்து தொடங்குகிறேன்' என்றார்.
'பெஸ்ட் ஆப் லக்' என கவர்னர் சொன்னார். மக்களை எதிர்கொள்ள பயப்படும் பா.ஜ., புலனாய்வு அமைப்புகள் மூலமும் கவர்னர் மூலமும் எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பார்ப்பது கோழைத்தனம். இந்த உருட்டல்,. மிரட்டல்களை எல்லாம் மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது இந்திய மக்களுக்கும் பா.ஜ.,வுக்கும் எதிரான யுத்தம். பா.ஜ., வேரோடு வீழ்த்தப்படும்.
இண்டியா கூட்டணி மக்கள் அணிதிரண்டுவிட்டனர். ஜூன் 4ம் தேதியன்று மோடியின் தூக்கம் தொலையும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதையும் செய்யாமல் தமிழே மூத்த மொழி என பிரதமர் மோடி நீலிக்கண்ணீர் வடிக்கிறார். சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு பா.ஜ., அரசு கொடுத்த பணம் எவ்வளவு என சொல்லட்டும்.
கள்ளக் கூட்டணி
மக்கள் பேரிடரில் பாதிக்கப்படும்போது தமிழக அரசின் நிதியில் இருந்து கொடுத்தோம். அதையும் கொச்சைப்படுத்தி ஆனந்தம் அடைவது என்ன மாதிரியான அரசியல். தமிழகம் கொடுக்கும் 1 ரூபாயில் 29 பைசாவை திருப்பிக் கொடுக்கின்றனர். இதற்கு மத்திய நிதி அமைச்சர் ஆணவமாக பதில் கொடுக்கிறார். அது பிச்சையல்ல, உரிமை.
கார்ப்பரேட் கம்கெனிகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களை தள்ளுபடி செய்தார்கள். ஏழை மக்கள் என்றால் பா.ஜ.,வுக்கு இளக்காரமாக தெரிகிறது. பா.ஜ.,வை பழனிசாமி கண்டிக்கிறாரா... அறிக்கை விடுகிறாரா... சி.ஏ.ஏ.,வை ஆதரித்துவிட்டு இப்போது எதிர்ப்பதாக பேசுகிறார். ஊழல் படிந்துள்ள தனது கரங்களைக் காப்பாற்ற பா.ஜ.,வுக்கு பாதம் தாங்கியாக பழனிசாமி இருந்தார்.
இப்போது அதே பா.ஜ., உடன் கள்ளக்கூட்டணி நாடகத்தை நடத்தி வருகிறார். இந்த நாடகம் விரைவில் முடிவுக்கு வரும். இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் இண்டியா கூட்டணி ஆட்சிமைக்க வேண்டும். அப்போது தான் நாட்டின் பன்முகத்தன்மையை காப்பாற்ற முடியும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
வாசகர் கருத்து