ராகுலுக்கு 1600 கோடி ரூபாய் எப்படி வந்தது : அமித்ஷா கேள்வி
" தேர்தல் பத்திரங்கள் மூலம் ராகுலுக்கு 1,600 கோடி ரூபாய் கிடைத்துள்ளது, அவை எங்கு இருந்து வந்தன என்பதை அவர் விளக்க வேண்டும்" என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நடத்திய 'ரைசிங் பாரத்' மாநாட்டில் அமித்ஷா பேசியதாவது:
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை மதிக்கிறேன். தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பா.ஜ., அதிக நன்கொடை பெற்றது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது முற்றிலும் தவறானது.
ராகுலுக்கு 1,600 கோடி ரூபாய் கிடைத்துள்ளது, அவை எங்கு இருந்து வந்தன என்பதை அவர் விளக்க வேண்டும். தேர்தல் பத்திரங்களை நாங்கள் வெளிப்படையான நன்கொடை என்றே சொல்கிறோம். ஆனால் எதிர்க்கட்சிகள் இதை வசூல் என்கின்றனர். பா.ஜ.,வை விட எதிர்க்கட்சிகள் தான் அதிக நிதியைப் பெற்றுள்ளன.
இண்டியா கூட்டணி மட்டும் 6,200 கோடி ரூபாய்க்கு மேல் நிதி பெற்றுள்ளது. 17 மாநிலங்களில் பா.ஜ., தலைமையிலான அரசு நடக்கிறது. இண்டியா கூட்டணி தலைமையில் எத்தனை இடங்களில் ஆட்சி நடக்கிறது?
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் வாயிலாக கறுப்பு பணத்தை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டோம். முன்பு, கட்சிகளுக்கு நன்கொடையாக வந்த பணம் கட்சித் தலைவர்களிடம் நேரடியாக சென்றது, ஆனால், தேர்தல் பத்திரம் திட்டம் வந்தபின் அந்த நிலை மாறியது.
நன்கொடையாக பெறப்படும் தொகை நேரடியாக காசோலையாக மாற்றப்பட்டு கட்சிக்கு சேர்ந்தது. இதனை எதிர்கட்சிகள் விரும்பவில்லை. அவர்களுக்கு தங்கள் குடும்பம் வாழ்ந்தால் மட்டும் போதும் என நினைக்கின்றனர்.
வரும் லோக்சபா தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவதை இலக்காக வைத்திருக்கிறோம். பிரதமர் மோடி சிறப்பாக பணியாற்றி வருவதால் இந்த இலக்கை எங்களால் அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து