பிரதமர் அடிக்கடி தமிழகம் வருவது ஏன் : ஸ்டாலின் சொன்ன காரணம்

"பா.ஜ., வளர்ந்து வருகிறது என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு யார் வளர்ந்திருக்கிறார் என்று தெரியும்" என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
லோக்சபா தேர்தல் தேர்தல் அறிக்கையை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். பின், செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
பிரதமர் தமிழகம் வருவதால், தி.மு.க.,வுக்கு காய்ச்சல் வந்திருப்பதாக கூறியிருக்கிறார். யாருக்குக் காய்ச்சல் வந்திருக்கிறது என்று, எங்கள் பொருளாளர் பாலு தெளிவாக பதில் சொல்லிவிட்டார். அதனை விளக்க விரும்பவில்லை. தோல்வி பயம் வந்த காரணத்தினால் அடிக்கடி வர வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
வரட்டும், வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், இப்போது தேர்தல் நேரத்தில் வரும் பிரதமர், தமிழகத்தில் மழை, வெள்ளம் வந்தபோது, சோதனை ஏற்பட்டபோது, வந்திருந்து மக்களுக்கு ஆறுதல் சொல்லியிருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
கூட்டணி விஷயத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கேட்பதற்கு உரிமை உண்டு. அதற்காக ஒரு குழு அமைத்து, அந்தக் குழுவில் பேசி அதில் விவாதித்து அவர்களே திருப்தி அடைந்து, திருமாவளவனே விளக்கமும் சொல்லிவிட்டார்.
காங்கிரசை பொறுத்தவரையில், அது அகில இந்திய அளவில் இருக்கும் கட்சி. அதனால், மற்ற மாநிலங்களில் இருக்கும் பிரச்னைகளை எல்லாம் சரி செய்துவிட்டு, தமிழகத்தில் இருக்கும் கூட்டணியோடு பேசுவதற்குக் கொஞ்சம் காலதாமதமானது. அதையும் சுமுகமாகத்தான் முடித்திருக்கிறேன்.
தி.மு.க.விற்கு பிரசாரம் செய்ய பிரதமரே போதும். அவரே எங்களுக்கு நன்றாக பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். கவர்னரும் பிரதமரும் சேர்ந்து மீண்டும் தி.மு.க.விற்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தருவதற்கான வாய்ப்பை அவர்களே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
வாரிசு அரசியல் தலைதூக்கியிருப்பதாக பிரதமர் கூறுகிறார். நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இது குடும்பக் கட்சிதான். தி.மு.க.,வை குடும்பப் பாச உணர்வோடு, அண்ணாவும் கருணாநிதியும் துவக்கி வைத்திருக்கிறார்கள். உழைப்பின் அடிப்படையில்தான் பொறுப்புகளும் பல பணிகளும் கொடுக்கப்படுகிறதே தவிர, வாரிசு அடிப்படையில் கொடுக்கப்படுவது அல்ல.
அ.தி.மு.க. தேர்தல் கூட்டணி முடிவாகாமல் இருப்பதற்கு நாங்கள் காரணம் அல்ல. எங்கள் கூட்டணியை நாங்கள் முடித்து விட்டோம். பா.ஜ., வளர்ந்து வருகிறது என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் முடிந்த பிறகு தெரியும். யார் வளர்ந்திருக்கிறார்கள்... யார் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்... யார் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள்... யார் நோட்டாவைவிட குறைவாக வாக்கு வாங்குகிறார்கள் என்பது தெரியப்போகிறது.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
வாசகர் கருத்து