முஸ்லிம்களுக்கு தனித்த அதிகாரம் தேவை

தமிழகத்தில், முஸ்லிம்களின் ஓட்டுக்கள் வித்தியாசமாக கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. தமிழக மக்கள் தொகையில், 8 சதவீதம் முஸ்லிம்கள் என்றால், 70 லட்சம் முஸ்லிம்கள் தமிழகத்தில் இருப்பர். இவர்களில், 70 சதவீதம் பேர், தி.மு.க.,வுக்கு ஓட்டளிப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும், தி.மு.க., கூட்டணியில் இல்லாமல் போட்டியிடும் முஸ்லிம் இயக்கங்களை, தி.மு.க., ஆதரவு முஸ்லிம் கட்சிகளும், தி.மு.க.,வும் சேர்ந்து காலி செய்து விடுகின்றன. எஸ்.டி.பி.ஐ., - மஜ்லிஸ் கட்சி எனப்படும், ஏ.ஐ.எம்.ஐ.எம்., போன்ற முஸ்லிம் கட்சிகளின் பயணம் வாயிலாக, இது தெளிவாக புரியும்.

எஸ்.டி.பி.ஐ.,




தமிழகத்தில் துவக்கத்தில், எஸ்.டி.பி.ஐ., தனித்தே போட்டியிட்டு வந்தது. அப்போது, அதன் மீது, 'பா.ஜ.,வின் பி-டீம்' என்ற, முத்திரை குத்தப்பட்டது. அதனாலேயே, அந்தக் கட்சி, தனித்துப் போட்டியிடுவதில் இருந்து மாறி, தி.மு.க.,வோடு கூட்டணி அமைக்க பேச்சு நடத்தியது.காலம் காலமாக, தி.மு.க.,வோடு ஒட்டிக் கொண்டே இருக்கும் முஸ்லிம் இயக்கங்கள், முஸ்லிம்கள் தங்களுக்கும், தி.மு.க.,வுக்கும் தான் ஓட்டளிப்பர் என, தி.மு.க.,விடம்

அழுத்தமாக சொல்லிச் சொல்லியே, எஸ்.டி.பி.ஐ.,யை கூட்டணியில் சேர விடாமல் தடுத்தனர்.மேலும், 'பா.ஜ.,வின் பி-டீம்' என்ற முத்திரையால், முஸ்லிம்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டு, அதன் வளர்ச்சி தடைபட்டு விட்டது. வேறு வழியில்லாமல், இந்த முறை தினகரனின் அ.ம.மு.க.,வுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.

இருப்பினும், 'பா.ஜ.,வுக்காக, தி.மு.க.,வின் முஸ்லிம் ஓட்டுகளை சிதரடிக்கும் பணியை, எஸ்.டி.பி.ஐ., பார்த்துக் கொள்கிறது' என்ற, அதே பழியை முஸ்லிம் இயக்கங்கள் பரப்புகின்றன.இந்த இடத்தில் தான், ஒரு முக்கியமான விஷயத்தை கூர்ந்து நோக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ., தமிழகத்தில் மட்டும் இயங்கும் மாநில கட்சி அல்ல. நாடு முழுவதும் இயங்கும் ஒரு தேசிய கட்சி. கேரளாவில் தனித்தே போட்டியிடும் அந்த கட்சி, குறிப்பிட்டுசொல்லக் கூடிய அளவுக்கு முஸ்லிம் ஓட்டுக்களை பெற்று, மதிக்கத்தக்க அளவில் உள்ளது.


அந்த கட்சியின் செயல்பாடுகள் அனைத்தும், தங்களுக்கு எதிர்ப்பாக இருப்பதாக கருதும் பா.ஜ., தாங்கள் ஆளும் மாநிலங்கள் சிலவற்றில், எஸ்.டி.பி.ஐ., கட்சியை தடை செய்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில், எஸ்.டி.பி.ஐ., ஆனது, பா.ஜ.,வின், 'பி-டீம்' எனப்படுகிறது!

மஜ்லிஸ் கட்சி



'
உங்கள் சிந்தனையில் தான் நானும் இருக்கிறேன். அதற்காகவே கட்சி நடத்துகிறேன். உங்க ஆட்டத்தில், என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்' என, மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஓவைசி, காங்கிரசை அணுகினார். ஆனால், பா.ஜ.,வை எதிர்க்க, தாங்கள் மட்டுமே மொத்த குத்தகைதாரர் என்பது போல நடந்து கொண்டது காங்கிரஸ். அதையே தான், தமிழகத்தில் தி.மு.க.,வும் செய்தது.

பீஹாரில் தன்னை நிராகரித்த காங்கிரசுக்கு எதிராக தனித்துப் போட்டியிட்டு, தோற்கடித்தது மஜ்லிஸ் கட்சி. தற்போது, டி.டி.வி.தினகரனோடு கைகோர்த்து, மூன்று தொகுதிகளில் களம் இறங்கி இருக்கிறது. உருது பேசும் மக்களின் ஓட்டு, இம்முறை தி.மு.க.,வுக்கு விழக்கூடாது என்பதை, நோக்கி பணியாற்றி வருகிறது.

தி.மு.க., மாயை




அ.ம.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்துள்ள, எஸ்.டி.பி.ஐ.,யும் மஜ்லிஸ் கட்சியும் வெற்றி பெறுகின்றனவா என்பது முக்கியமல்ல. முஸ்லிம்களின் ஓட்டுக்கள், தி.மு.க.,வுக்குத் தான் என்ற அசைக்க முடியாத ஆணியை, பிடுங்கி எறியும் பணியை செய்தாலே போதும்.ஏனெனில், பிற முஸ்லிம் கட்சிகள் மீது பொய் முத்திரை குத்தி, அவற்றை வளரவிடாமல் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக நசிந்து போக செய்யும் தி.மு.க., ஆதரவு முஸ்லிம் இயக்கங்கள், முஸ்லிம் ஓட்டுகளை ஏகபோகமாக, தங்கள் அதிகாரம் என்பது போல் அனுபவித்து வருகின்றன.
ஆனால், முஸ்லிம் உரிமைக்கு குரல் கொடுக்கவோ, அவமானம் ஏற்பட்டால் தட்டிக் கேட்கவோமுன்வருவதில்லை. முஸ்லிம்களுக்கு கேடு விளைவிக்கும் செயல்களை தி.மு.க., செய்தால், 'அது இதற்காகத் தான் செய்யப்பட்டு இருக்கும். பழைய சம்பவங்களை எல்லாம், மேற்கோள் காட்டி பேச வேண்டாமே' என, தி.மு.க.,வுக்கு முட்டுக் கொடுப்பதை வாடிக்கைஆக்கிவிட்டனர்.

கண்மூடித்தனமான இந்த தி.மு.க., ஆதரவால், தமிழகத்தில், முஸ்லிம்கள் தனித்த அடையாளத்துடன் அரசியல் செய்யவோ, அதிகாரம் பெறவோ முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது.அதனால், முஸ்லிம் ஓட்டுகள் பிரிவதால், தி.மு.க., வீழ்த்தப்படலாம் என்பதை காட்டிலும், தங்களுடைய முக்கியத்துவத்தை அறியாமல் வெறும் ஓட்டு வங்கியாக மாறிவிட்ட முஸ்லிம் மக்களுக்கு, புதிய துவக்கம் தேவை என்பதே முக்கியம். தி.மு.க., மாயையில் இருந்து விடுபடும் காலம் வந்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தினால், முஸ்லிம்களுக்கான அரசியல் அதிகாரம், தமிழகத்தில் முளைவிடத் துவங்கும்.
புதுமடம் ஜாபர் அலி
எழுத்தாளர்



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)