நெல்லையும் தொல்லை ஆனது: தி.மு.க., கைவிட்டது ஏன்?
நெல்லை எங்கள் எல்லை... குமரி எங்கள் தொல்லை என்பார் தி.மு.க., தலைவர் கருணாநிதி.
தற்போதைய தேர்தலில் திருநெல்வேலி மாவட்ட தி.மு.க.,வில் நிலவும் கோஷ்டி பூசலால் நெல்லையும் தி.மு.க.,விற்கு தொல்லையாகி விட்டதோ என தோன்றுகிறது.
கடந்த 2019 தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் ஞானதிரவியம், அ.தி.மு.க., வேட்பாளர் பி.எச்.மனோஜ் பாண்டியனை விட ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 457 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தற்போது அ.தி.மு.க., - பா.ஜ., ஆகியவை தனித்தனியே போட்டியிடும் சூழலில் தி.மு.க.,விற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் திருநெல்வேலியும் ஒன்று.
இருப்பினும் திருநெல்வேலியை கைவிட்டதற்கு தி.மு.க.,வில் நிலவும் கோஷ்டி பூசல்கள் காரணமாக கூறப்படுகிறது. தி.மு.க., மாவட்ட செயலர் ஆவுடையப்பன், தற்போதைய சிட்டிங் எம்.பி., ஞான திரவியம், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு சீட் கேட்டனர்.
தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் பெயரும் கடைசி வரை இருந்தது. ஒரு கட்டத்தில் அவருக்கே சீட் கொடுக்க முடிவெடுத்தனர். ஆனால், மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி பூசலில் சிக்கி கிரகாம்பெல் தோற்றுவிடக்கூடும் என, உளவுத்துறை ஆளும் கட்சி தலைமைக்கு தகவல் கொடுக்க, அதை ஏற்று, தொல்லையே வேண்டாம் என முடிவெடுத்து, தொகுதியை கூட்டணி கட்சியான காங்.,குக்கு, தி.மு.க., தலைமை தாரை வார்த்து விட்டது.
வாசகர் கருத்து