தமிழக மக்கள் நிதானமாக யோசித்தே ஓட்டளிக்கிறார்கள். இல்லையெனில், தேசம் முழுவதும், ஒரு கட்சிக்கு மக்கள் பெருமளவில் ஓட்டளித்து, மாபெரும் வெற்றியை தேடித்தந்த நிலையில், தமிழகத்தில் மட்டும், அந்தக் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காமல் போகுமா?
அதேபோல, சட்டசபைக்கு மாநில கட்சிக்கும், லோக்சபாவுக்கு தேசிய கட்சிக்கும் ஓட்டளிக்கும் வியப்பான செயலும், தமிழகத்தில் நடந்திருக்கிறது. அப்படிப்பட்ட தெளிவான வாக்காளர்களிடம், எனக்கு இந்த முறை ஒரே ஒரு எதிர்பார்ப்பு தான் உள்ளது. அது என்ன என்று பார்ப்பதற்கு முன், மற்ற சில விஷயங்களை அலசுவோம்.
தமிழகத்தில் ஆட்சி பொறுப்புக்கு தேர்ந்தெடுக்க, இரண்டு பெரிய கட்சிகள் மட்டுமே உள்ளன. ஒன்று மாற்றி ஒன்றாக, அந்த இரண்டு கட்சிகளுக்கே வாய்ப்பு அளிக்கிறோம். பெரும்பாலும் நம் ஓட்டு, ஒரு கட்சி நமக்கு நல்ல ஆட்சியை தரும் என்ற நம்பிக்கையில் அளிக்கப்படுவதல்ல; ஆளும் கட்சி மீதான, கடும் அதிருப்தியை தெரிவிப்பதாகவே இருக்கிறது.
அதிருப்தி இல்லாத சமயங்களில், ஒரே கட்சியை தொடர்ந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கிறோம். மூன்றாவது முறை, ஆளும் கட்சியின் மீது எந்த பிரத்யேகமான அதிருப்தி இல்லாத போதும், 'இவர்கள் போதும்' என்று, எதிர்க்கட்சியை ஆளும் கட்சியாக்கி விடுகிறோம். இப்படிப்பட்ட சூழலில், இந்த தேர்தலில் நடிகர் கமல், தமிழக மக்களுக்கு மூன்றாவது கட்சியும் இருக்கிறது என்ற வாய்ப்பை கொடுத்திருக்கிறார். ஆனால், இது நாம் ஏற்கனவே சோதித்துப் பார்த்து ஏமாந்து போன வழி.
நடிகர் விஜயகாந்தை, மக்களின் குறை தீர்ப்பவராகவும், நியாயத்தை நிலைநாட்டுபவராகவும், அநீதியை தண்டிப்பவராகவுமே ஒரு இருட்டு அரங்கத்தில், நம் கண் முன்னே தெரியும் பிரமாண்டமான படுதாத் துணியில் பார்த்துப் பார்த்து, ஆவேசமாக கைதட்டினோம். விசில் அடித்தோம். அதையே அவர், நிஜத்திலும் செய்வார் என்று நம்பி, அவரை சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராகவும் அமர்த்தினோம். அதற்காக, தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான, தி.மு.க.,வையே ஓரம் கட்டினோம்.
நிஜத்தில் நடந்தது என்ன? அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை, விஜயகாந்த் நிறைவேற்றவில்லை; சட்டசபைக்கே போகவில்லை. அதற்குப் பிறகு உடல்நல பிரச்னை. அந்த அத்தியாயம் அத்துடன் முடிவுக்கு வந்தது. சரி, நாம் எதிர்மறையாக யோசிக்க வேண்டாம். கமல்ஹாசனை நியாயமாகவே அணுகுவோம். கமல், என் விருப்பத்துக்கு உரியவர். நடிப்பினால் அல்ல. அதற்கு ஏராளமான பேர் இருக்கிறார்கள்.
நேற்று வந்த பாபி சிம்ஹா என்பவரும், நன்றாகவே நடிக்கிறார். எம்.ஆர்.ராதா, பாலையாவிலிருந்து தொடங்கி, இப்போதைய தனுஷ் வரை, தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிப்பில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஏராளம். கமலின் பெருமை அது அல்ல; அவர் இலக்கியம் தெரிந்தவர். அவர் அறியாத தமிழ் எழுத்தாளர் இல்லை.
40 ஆண்டுகளுக்கு முன் அவர் அறிமுகப்படுத்திய, 'பிரக்ஞை' என்ற சிறுபத்திரிகையை படித்து தான், நான் சிறுபத்திரிகைகளின் பக்கமே வந்தேன். தமிழ் நடிகர்களில் கமல் அளவுக்கு இலக்கியம் அறிந்தவர்கள் வேறு யாரும் இல்லை. ஆனால், முதல்வர் பதவியில் அமர, அந்தத் தகுதி மட்டும் போதுமா?
கமலின் பின்னணி என்ன; அவருடைய தகுதி என்ன; 45 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் ஒரு கனவு உலகத்தில் வாழ்ந்தவர். எதார்த்தத்துக்கும், அந்த உலகுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் சினிமாவை சொல்லவில்லை. சினிமாவில், ஒரு உச்சநிலையை அடைந்த, ஹீரோவின் எதார்த்த வாழ்க்கையை சொல்கிறேன். உண்மையில் அது, எதார்த்த வாழ்க்கையே இல்லை. அதுவே, ஒரு கனவு உலகம் தான். அவர் என்ன சொன்னாலும் கேட்டு, ஆமாம் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
விமர்சனம், மாற்றுக் கருத்து என்றால், என்னவென்றே தெரியாத ஒரு உலகம் அது. தொடர்ந்து, 45 ஆண்டுகள் இப்படி வாழ்ந்த ஒருவர், நிஜ உலகத்துக்கு வந்தால் எப்படி இருக்கும்? அர்னாப் கோஸ்வாமியின் ஒருங்கிணைப்பில், கமல்ஹாசனுக்கும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் இடையேயான விவாதத்தில் என்ன நடந்தது?
கிட்டத்தட்ட வாயே பேச முடியாதவராக அமர்ந்திருந்தார் கமல். இரானியின் எந்தக் கேள்விக்கும், கமலால் பதில் சொல்ல முடியவில்லை. காரணம், 45 ஆண்டுகளாக, அவரிடம் யாரும் எதிர்த்துப் பேசியோ, கேள்வி கேட்டோ அவருக்குப் பழக்கமில்லை. இத்தனைக்கும் இரானியை விட, கமல் சரளமாக ஆங்கிலம் பேசக் கூடியவர். இதுதான் எதார்த்தம். சினிமாவில் ஹீரோ; நிஜத்தில் ஜீரோ. கமலுக்கு மட்டும் அல்ல; எல்லா நடிகருக்குமே இது பொருந்தும்.
சினிமாவில் வசனகர்த்தா இருக்கிறார்; எழுதிக் கொடுத்து விடுவார். அநீதியை எதிர்ப்பது எப்படி என, 'ஸ்டண்ட் மாஸ்டர்' சொல்லிக் கொடுத்து விடுவார். மற்றபடி இருக்கவே இருக்கிறார் இயக்குனர். நிஜ வாழ்க்கையில், இவர்கள் யாருமே இல்லாமல், ஸ்மிருதி இரானியை எதிர்கொண்டபோது மாபெரும் தோல்வி. கட்சி என்று எடுத்து கொண்டால், கமலின் கொள்கை என்ன? அவருடைய கொள்கைகள் எல்லாமே, நடைமுறைத் திட்டங்கள் தான். கொள்கை பற்றிக் கேட்டால், மைக்கை பக்கத்தில் இருப்பவரிடம் கொடுத்து விடுகிறார்.
கமலுக்கு கொள்கை இல்லாததற்கு காரணம், அவருக்கு மக்களின் எதார்த்த வாழ்க்கை பற்றி எதுவுமே தெரியாது. உலக நாயகன் என்றும், ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர் என்றும், சலிப்பூட்டும் அளவுக்கு, 45 ஆண்டுகளாக அவரை முகஸ்துதி செய்த கூட்டத்துக்கு மத்தியில் வாழ்ந்த ஒருவர் வேறு எப்படி இருப்பார்?
தென்னாப்ரிக்காவில், 20 ஆண்டுகள் வாழ்ந்த பின், இந்தியா திரும்பிய காந்தி, 'நான் அரசியலில் ஈடுபட விரும்புகிறேன்; என்ன செய்ய வேண்டும்?' என்று தன் குருநாதர் திலகரிடம் கேட்ட போது, 'இந்தியாவை சுற்றி வா' என்றார் திலகர். பஸ்சிலும், ரயிலிலும் (மூன்றாம் வகுப்பு) பயணித்தும், நடந்தும் தேசம் முழுவதும் சுற்றினார் காந்தி. தன் சுற்றுப் பயணத்தில் ஒரு நாள், மதுரையில் விவசாயிகளை பார்த்து, 'நீங்கள் கதர் சட்டை அணியுங்கள்' என்றார்.
மறுநாள் யாரும், கதர் அணிந்திருக்கவில்லை; காரணம் கேட்டார். விவசாயிகள், 'எங்களுக்கு இடுப்புத் துண்டும், மேல் துண்டும் தவிர, வேறு எதுவுமே கிடையாது. சட்டையை எல்லாம் பார்த்ததே இல்லை' என்றனர். அந்தக் கணமே காந்தி, அரை நிர்வாணத்திற்கு மாறினார். கமல்ஹாசன், முதலில் எதார்த்தத்தை காண வேண்டும். பிறகு, அரசியல் பற்றி யோசிக்கலாம்.
- சாரு நிவேதிதா எழுத்தாளர்
வாசகர் கருத்து