Advertisement

'சேலத்தையும் விட்டு கொடுக்க தயார்': கூட்டணிக்கு அ.தி.மு.க., கடைசி முயற்சி

பா.ஜ., - - பா.ம.க., கூட்டணி உறுதியாகி விட்டதாக தகவல் வெளியான நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, பா.ம.க.,- எம்.எல்.ஏ., அருள், நேற்று மாலை சந்தித்துப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களாக அ.தி.மு.க.,- பா.ஜ., இரு தரப்புடனும் பா.ம.க., மறைமுகமாக பேச்சு நடத்தி வந்தது. ஒரு ராஜ்யசபா எம்.பி., மத்திய அமைச்சர் பதவி என பா.ஜ.,விடமும், எட்டு தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி என அ.தி.மு.க.,விடமும் கேட்டு பா.ம.க., நிபந்தனை விதிப்பதாக தகவல் வெளியானது.

திடீர் திருப்பம்ராஜ்யசபா எம்.பி., பதவியை வழங்குவது நடைமுறையில் சாத்தியமற்றது என இரு கட்சிகளும் மறுத்து விட்டதாகவும், குறைந்தது ஐந்து எம்.பி.,க்கள் வென்றால் மத்திய அமைச்சர் பதவி தருவதாக பா.ஜ., தரப்பில் கூறப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

பா.ம.க., பிடிவாதமாக இருப்பதால் ராஜ்யசபா எம்.பி., பதவி தர பா.ஜ., ஒப்புக் கொண்டதாகவும், ஓரிரு நாளில் பா.ம.க., -- பா.ஜ., இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் கூறப்பட்டது.

இதற்கிடையில், பா.ஜ.,வோடு கூட்டணி செல்ல வேண்டாம் என பா.ம.க.,வில் இருக்கும் அ.தி.மு.க., ஆதரவினரான சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிபேட்டை உள்ளிட்ட பன்னிரெண்டு மா.செ.,க்கள் கூறத் துவங்கினர். இதற்கு வலுவான பின்புலம் உண்டு.

இந்நிலையில் திடீர் திருப்பமாக நேற்று மாலை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், சேலம் மேற்கு தொகுதி பா.ம.க.,- எம்.எல்.ஏ., அருள் சந்தித்துப் பேசினார். அதற்கு முன்பாக அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் சிலர், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

பா.ஜ.,வுடனான கூட்டணியை கடந்த செப்டம்பரில் முறித்துக் கொண்ட பழனிசாமி, அ.தி.மு.க., தலைமையில் 'மெகா' கூட்டணி அமையும் என்றார். எதிர்பார்த்தபடி எதுவுமே நடக்காததால், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடவும் முக்கிய நிர்வாகிகள் ஆர்வம் காட்டவில்லை.

எனவே, பா.ம.க.,வை கூட்டணிக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான், பா.ம.க.,வை இழுக்க கடைசி கட்ட முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளதாக அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.

நாளை மறுதினம் வேட்புமனு தாக்கல் துவங்க உள்ள நிலையில், கடும் நெருக்கடியில் இருக்கும் பழனிசாமி, பா.ம.க.,வின் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருளுடன் பேசி கூட்டணியை இறுதி செய்ய முயன்றுள்ளார்.

இதற்காக, பா.ம.க., கேட்கும் சேலம் உள்ளிட்ட தொகுதிகளையும் விட்டுத்தர அவர் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, கூட்டணியை அ.தி.மு.க., ஓரிரு நாளில் முடிவெடுத்துவிடும் என்று அ.தி.மு.க., தரப்பில் கூறுகின்றனர்.

கண்காணிப்புபா.ம.க., முக்கியத் தலைவர் ஒருவர் கூறியதாவது:

பா.ம.க.,வைப் பொறுத்தவரை கட்சியின் தலைவராக அன்புமணி இருந்தாலும், முக்கிய முடிவுகள் அனைத்தும் நிறுவனர் ராமதாஸ் தான் எடுப்பார். அன்புமணி, பா.ஜ.,வோடு கூட்டணிக்கு செல்ல விரும்பினாலும், அ.தி.மு.க., பக்கம் செல்லவே ராமதாஸ் விரும்புகிறார். அமைச்சராக இருந்தபோது, ஜெய்ப்பூர் மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரம் உள்ளிட்ட சில பிரச்னைகள் காரணமாக, பா.ஜ.,வை அன்புமணி விரும்புகிறார். கூடவே, கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவரின் மகன் வாயிலாக பிரபல சினிமா நிறுவனத்தோடு இருக்கும் தொடர்புகள், கட்சியினர் பலரும் அந்நிறுவனத்தில் செய்திருக்கும் முதலீடுகள் அனைத்தும், மத்திய அரசின் பல்துறைகளால் கவனிக்கப்பட்டு வருகிறது.

தடுமாற்றம்அதனால், பா.ஜ.,வோடு கூட்டணி வைக்கவில்லை என்றால் தமக்குப் பாதிப்பு ஏற்படும் என அஞ்சுவோர் அக்கூட்டணிக்கு செல்ல அன்புமணியை வற்புறுத்துகின்றனர். அதேநேரம், அ.தி.மு.க.,வோடு நெருக்கமாக இருக்கும் மா.செ.,க்கள், இதற்கு நேர் எதிராக அழுத்தம் கொடுக்கின்றனர்.

இந்த இருவிதமான அழுத்தங்களால்தான் பா.ம.க., தரப்பு, கூட்டணி விஷயத்தில் தெளிவான முடிவெடுக்க முடியாமல் தடுமாறி வருகிறது. கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு பணிந்து பா.ம.க., தங்கள் பக்கம் வந்தாலும், பன்னிரெண்டு மாவட்டங்களில் இருக்கும் பா.ம.க., -மா.செ.,க்கள் கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பரா என்ற சந்தேகம், தற்போது பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்