தேர்தல் தேதி அறிவிப்பிலும் அரசியலா : வானதி சீனிவாசன் கொதிப்பு

"தி.மு.க., அரசின் 3 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் தாங்க முடியாத சுமையில் உள்ளளனர். அதற்கு தேர்தல் மூலம் மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்" என, பா.ஜ., தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
வானதி சீனிவாசன் கூறியதாவது:
தேர்தல் தேதி அறிவிப்பில் கூட காங்கிரசும் தி.மு.க.,வும் அரசியல் செய்கின்றன. தேர்தலுக்கு முன்பே தேர்தல் ஆணையத்தின் மீது பழி போடுவது என்பது அவர்களின் தோல்வியை ஒப்புக் கொள்வது போல.
கடந்த 10 ஆண்டுகளில் உ.த்தரபிரதேச அரசுக்கு கொடுத்த தொகையைவிட தமிழகத்துக்கு அதிகளவு வளர்ச்சி திட்டங்களை பா.ஜ., அரசு கொடுத்துள்ளது. பா.ஜ., ஆளும் மாநிலங்களைவிட தமிழகத்துக்கு ஏராளமான சிறப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் வந்துள்ளன. தமிழகத்துக்கு டிபென்ஸ் காரிடார் வந்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சி மேம்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
ஆனால், பிரதமரை, 28 பைசா மோடி என உதயநிதி விமர்சிக்கிறார். சமீபத்தில் போதைப் பொருள் கடத்தல் வழக்கல் கைதான ஜாபர் சாதிக்குடன் உறவு வைத்துள்ள உங்களை, 'டிரக் உதயநிதி' என அழைக்கலாமா. ஒருவரையும் தரம் தாழ்ந்து நாங்கள் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. உங்கள் நிலையில் இருந்து பிரதமரை விமர்சிப்பதை ஏற்க முடியாது.
கடந்த 3 ஆண்டுகளில் மக்களுக்கு விரோதமான ஆட்சியாக, தி.மு.க., அரசு உள்ளது. சொத்துவரி, மின்கட்டணம், பத்திர பதிவு என மக்கள் துன்பப்படுகின்றனர். மக்கள் தாங்க முடியாத சுமையில் உள்ளளனர். அதற்கு தேர்தல் மூலம் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.
மத்தியில் யார் ஆட்சியமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க கூடிய தேர்தல் இது. அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என நினைக்கிறீர்கள் என மக்களிடம் 2 கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம். சுயநலமாக உள்ள இ,ண்டியா கூட்டணி வேண்டுமா... தன்னுடைய செயலால் உழைப்பால் நாட்டை முன்னேற்றும் மோடி வேண்டுமா... யார் வரவேண்டும் என மக்கள் தீர்மானிக்கட்டும்.
தேர்தல் பத்திரம் வருவதற்கு முன்பு அரசியல் கட்சிகளின் கணக்கில் கோடிக்கணக்கில் நிதி கொடுக்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் பத்திர நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதற்கு முன்னதாக, யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்ற எந்தக் கணக்கும் கிடையாது.
தேர்தல் பத்திரங்களின் மூலம் கடந்த 3 ஆண்டுகால ஆட்சிக்குள் தி.மு.க., வாங்கிய தொகையை பாருங்கள். இந்தப் பணம், நேரடியாக வங்கிக் கணக்குக்கு வருகிறது. தேர்தல் பத்திரம் தொடர்பாக கேள்வி எழுப்பும் கட்சிகளை திருப்பிக் கேட்டால் அவர்களிடம் இருந்து பதில் வராது.
பிரதமர் தமிழகம் வந்தால் அதை தி.மு.க., விமர்சிக்கிறது. பொள்ளாச்சியில் அரசு நிகழ்ச்சியில் ஸ்டாலின் அரசியல் பேசினார். ஸ்டாலின், பயணம் செல்வதை நாங்கள் தடுக்கவில்லையே. தூத்துக்குடி, திருச்சி மற்றும் சென்னையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் வந்தார்.
விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க மட்டும் பிரதமரை, தி.மு.க.,வினர் அழைக்கின்றனர். அவர் இங்கு வந்து பணிகளை தொடங்கி வைத்தார், அதை விமர்க்கிறார்கள்.
பா.ஜ.,வில் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை 2 அல்லது 3 நாள்களில் அறிவிக்கப்படும். தேர்தல் பத்திரங்கள் குறித்து வதந்திகள் பரவி வருகிறது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையை வழங்க முடியும்.
பா.ஜ., அரசை அதானியும் அம்பானியும் தான் நடத்தி வருகிறார்கள் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பேசி வந்தன. ஆனால், தேர்தல் பத்திர நன்கொடையாளர்களில் அவர்கள் இருவரின் பெயர்களும் இல்லாததால் எதிர்க்கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளன. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பட்டியலை கொடுக்க பா.ஜ., தயாராக இருக்கிறது.
இவ்வாறு வானதி தெரிவித்தார்.
வாசகர் கருத்து