Advertisement

தேர்தல் கமிஷன் முன் உள்ள 4 சவால்கள்: பட்டியலிட்ட ராஜீவ் குமார்.

"லோக்சபா தேர்தலை வெளிப்படையுடனும் நேர்மையுடனும் நடத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது" என, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தெரிவித்தார்.

புதுடில்லியில் தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார், தேர்தல் கமிஷனர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து உள்ளிட்டோர், இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் பேசியதாவது:

லோக்சபா தேர்தலை நடத்த முழு அளவில் தயாராக உள்ளோம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தேர்தலை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்துவோம்.

97 கோடி வாக்காளர்கள்



ஒவ்வொரு தேர்தலும் சவால் நிறைந்ததுதான். தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக 800 மாவட்ட ஆட்சியர்களடன் நேரடியாக பேசியுள்ளேன். லோக்சபா தேர்தலில் 97 கோடிப் பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1.82 கோடி ஆகும்.

மொத்த வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 49,7 கோடிப் பேர், பெண் வாக்காளர்கள் 47,1 கோடிப் பேர். இவர்களில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் மட்டும் 2,18 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 10.5 லட்சம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும்.

85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 82 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. வன்முறையின்றி மிக அமைதியாக தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

4 சவால்கள்



ட்ரோன் மூலம் எல்லைகள் கண்காணிக்கப்படும். இந்த தேர்தலில் கமிஷன் முன்பு 4 சவால்கள் உள்ளன. அது, பணபலம், ஆள் பலம், வதந்திகள், விதிமீறல்கள் ஆகியவை. இவற்றை எதிர்கொண்டு நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவோம்.

தேர்தல் நேரத்தில் போலி செய்திகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவரை விமர்சிக்கலாம். ஆனால், போலி செய்திகளை பரப்பக் கூடாது.

வாக்குச்சாவடி மையங்கள், வேட்பாளர்களின் விபரங்களை செயலி வாயிலாக தெரிந்து கொள்ளலாம். குற்றப்பிண்ணனி உள்ள வேட்பாளர்களை சிவிஜில் செயலி வாயிலாக தெரிவிக்கலாம். தேர்தல் வன்முறையை தடுக்க சி.ஆர்.பி.எப்., படையினர் ஒவ்வொறு மாநிலத்திற்கும் அனுப்பப்படுவார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, புகார்கள் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். மாநில மற்றும் தேசிய எல்லைகளில் டிரோன் வாயிலாக கண்காணிக்கப்படும்.

கமிஷனின் அட்வைஸ்



இலவசங்களை தடுக்க அமலாக்கத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆன்லைன் பணப் பரிமாற்றம், வங்களில் இருந்து பணம் வெளியில் செல்வதை தீவிரமாக கண்காணிக்கப்படும். குறிப்பாக, வங்கிகளில் இருந்து மாலை நேரத்துக்குப் பிறகு பணம் எடுத்து செல்ல அனுமதி கிடையாது.

ஒவ்வொரு கட்சியில் உள்ள நட்சத்திர பேச்சாளர்களுக்கும் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, மத அடிப்படையிலான கருத்துகள், தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கருத்துகளை பேசக்கூடாது.

பிரசாரம் செய்யும் போது நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும். தேர்தல் நேரத்தில் போலி செய்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவரை விமர்சிக்கலாம். ஆனால், போலி செய்திகளை பரப்பக் கூடாது.

நேர்மையாக தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் தயாராக உள்ளது, இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு ராஜீவ்குமார் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்