தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பா.ஜ., ஆதாயம்: எதிர்க்கட்சிகள் கொதிப்பு
"தேர்தல் பத்திரங்களின் பின்னணியை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை ஏற்படுத்த வேண்டும்" என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை வழங்கியவர்கள் குறித்த விவரங்களை, தேர்தல் கமிஷனிடம் எஸ்.பி.ஐ வழங்கியது. இந்த விவரங்களை தேர்தல் கமிஷன், நேற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது.
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பா.ஜ.,வுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் வந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தை நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாற்றும் வேலையில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இதுகுறித்து, ராஜ்யசபா உறுப்பினர் கபில்சிபல் கூறுகையில், "சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை ஒவ்வொரு இந்தியர்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என சிலர் தெரிவித்தனர். இன்றைக்கு நாட்டில் நடப்பதை பார்த்தால் அந்தப் பணம் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது போல உள்ளது.
தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் ஏற்கனவே இருக்கின்ற விசாரணை அமைப்புகள் இதை விசாரிக்கக் கூடாது. இதற்கென சிறப்பு புலனாய்வு குழுவை உருவாக்கி விசாரிக்க வேண்டும்" என்றார்.
சிவசேனா கட்சியின் (உத்தவ் தாக்கரே) எம்.பி., சஞ்சய் ராவத் கூறுகையில், "மோடி அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்களை பல சூதாட்ட நிறுவனங்கள் வாங்கியுள்ளன. இவர்கள் வாங்கிய தேர்தல் பத்திரங்கள் பா.ஜ., தொடர்புடைய வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு ஒப்பந்தங்களை பெற்று, லட்சக்கணக்கில் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. இப்படி வாங்கிய பத்திரங்களின் தொகையை பா.ஜ., வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளனர். இந்தியாவில் நடந்துள்ள மிகப் பெரிய ஊழல் இது" என்கிறார்.
வாசகர் கருத்து