அ.தி.மு.க., பூத் முகவர் கூட்டத்தில் தள்ளுமுள்ளு
கோவையில் லோக்சபா தேர்தல் ஏற்பாடுகளில், தி.மு.க.,வினர் படுவேகமாக இருக்கின்றனர். வாக்காளர் பட்டியலை நகலெடுத்து, பூத் வாரியாக பிரித்து, வாக்காளர்கள் அதே வீட்டில் வசிக்கின்றனரா என கணக்கெடுத்து வருகின்றனர்.
குடும்பத் தலைவர்களுக்கு மொபைல் போனில் தொடர்பு கொள்ளும் பூத் முகவர்கள், வாக்காளர் பட்டியல் நகலை 'வாட்ஸாப்' மூலம் அனுப்பி, அவர்களது வீட்டிலுள்ள ஓட்டுகளை உறுதி செய்து கொள்கின்றனர்.
தேர்தல் களத்தில் ஆளுங்கட்சி படுவேகமாக இருக்க, அ.தி.மு.க., தரப்பு இப்போது தான் சோம்பல் முறித்திருக்கிறது. 872 பூத் கமிட்டி முகவர்களை கட்சி அலுவலகத்துக்கு அழைத்து கூட்டம் நடத்தியிருக்கிறது.
கூட்டத்துக்கு வராமல் போய் விடுவரோ என்னவோ என பயந்து, அறுசுவை உணவும், பரிசும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டனர் அ.தி.மு.க., நிர்வாகிகள்.
பரிசு எதுவா இருந்தா என்ன, வாங்கி வரலாம் என்று, பூத் முகவர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் ஆஜராகினர். அனைவருக்கும் பகுதி கழக செயலர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் டோக்கனை திருப்பிக் கொடுத்து, இரட்டை இலை சின்னம் அச்சடிக்கப்பட்ட சில்வர் பிளாஸ்க் ஒன்றும், மட்டன் பிரியாணி பக்கெட் ஒன்றும் வழங்கப்பட்டன. இவற்றை வாங்குவதற்கு கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆங்காங்கே நிர்வாகிகள் நின்று, பூத் முகவர்கள் வரிசையாகச் சென்று, வாங்கிச் செல்ல ஏற்பாடு செய்தனர்.
பூத் முகவர்கள் கூறுகையில், '100 வாக்காளருக்கு ஒருவர் வீதம் வீட்டுக்கே நேரில் சென்று சந்தித்து சந்தித்து, தி.மு.க., ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்ட அறிவுறுத்தினர். ஒரு பூத் கமிட்டியில், 19 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் தேதி மற்றும் வேட்பாளர் அறிவித்ததும், பூத் கமிட்டி செலவுக்கு பட்டுவாடா துவங்கும். கடந்த முறை பெற்ற ஓட்டுகளை விட அதிகமாக பெற வேண்டுமென இலக்கு நிர்ணயித்திருக்கின்றனர்' என்றனர்.
வாசகர் கருத்து