தி.மு.க.,வில் எதிரி யார்? கணக்கெடுக்கிறார் கார்த்தி
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ள கார்த்தி எம்.பி.,க்கு எதிரான தி.மு.க.,வினர் குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது. உரிய கவனிப்பிற்கு பின், 'கூல்' செய்வதற்கான முயற்சியில் கார்த்தி தரப்பு இறங்கியுள்ளது.
சிவகங்கை தொகுதியில் 2014 தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்நாதனை எதிர்த்து போட்டியிட்டு, கார்த்தி தோல்வி அடைந்தார். அதை தொடர்ந்து, தி.மு.க., கூட்டணியில் 2019 தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.,யானார். பதவிக்கு வந்த பின், தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்களை கண்டு கொள்வதே இல்லை என, நேர்காணலின் போது தலைமையிடமே தி.மு.க., நிர்வாகிகள் புகார் செய்தனர்.
காங்., மூத்த நிர்வாகிகளையும் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. இதனால், வரும் தேர்தலில் அவருக்கு எதிராகச் செயல்பட காங்., - தி.மு.க., அதிருப்தியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இத்தொகுதியில் தி.மு.க., ஆதரவு இருந்தால் தான் களத்தில் வெற்றி பெற முடியும். இதனால், தி.மு.க., அதிருப்தியாளர்களை நேரடியாக சந்தித்து, அவர்களை குளிர்விக்கும் முயற்சியில் கார்த்தி இறங்கியுள்ளார்.
இதற்காக, காங்., முக்கிய நிர்வாகிகள் மூலம், அதிருப்தி தி.மு.க., பிரமுகர்கள் குறித்த கணக்கெடுப்பும் நடக்கிறது. ஓட்டுப்பதிவன்று ஓட்டுச்சாவடிக்குள் அதிருப்தியாளர்கள் சென்றுவிட்டால், தனக்கு எதிராகச் செயல்படக்கூடும் என்ற அச்சத்தில், ஓட்டுச்சாவடிக்கு பெரும்பாலும் தன் ஆதரவாளர்களையே நியமிக்க முடிவு செய்துள்ளார்.
வாசகர் கருத்து