'நான் தான் நெல்லை வேட்பாளர்': அறிவிப்புக்கு முன் நயினார் பிரசாரம்
தமிழக பா.ஜ., மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன். திருநெல்வேலி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எம்.எல்.ஏ.,வாக இருப்பவருக்கே மீண்டும் லோக்சபா தேர்தலுக்கு சீட் தரப்படுமா என்ற சந்தேகங்களும் கட்சியினரிடையே உள்ளது.
இந்நிலையில் நேற்று காலையில் திருநெல்வேலி டவுன் சொக்கட்டான் தெருவில் நயினார் நாகேந்திரன், பெண்களிடம் ஓட்டு கேட்டு பிரசாரத்தை துவக்கினார்.
''நான் தான் திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர்; எனவே எனக்கு ஓட்டளியுங்கள்,'' என கேட்டுக்கொண்டார். பெண்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
நயினாரின் தனி ரூட்
கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி இருந்தது. அப்போதும் கூட்டணி பேச்சு முடிந்து வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பாகவே நயினார் நாகேந்திரன், 'நான் தான் பா.ஜ., வேட்பாளர்' எனக் கூறி பிரசாரத்தை துவக்கினார். இதற்கு அப்போது அ.தி.மு.க.,வினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.
பின் கட்சி முறைப்படி வேட்பாளருக்குரிய ஆவணங்களை தரும் முன்பாகவே பா.ஜ.,வினரோ, அ.தி.மு.க.,வினரோ கூட இல்லாமல் மகன் விஜயுடன் தனியே சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கடந்த தேர்தலின் போது பா.ஜ., சார்பில் குஷ்பு, திருநெல்வேலியில் போட்டியிடக்கூடும் என்பதால், கட்சி அதிகாரப்பூர்வமாக வேட்பாளராக அறிவிக்கும் முன்பே வேட்பு மனு தாக்கல் செய்தார். பின், அதே குஷ்புவை பிரசாரத்துக்கும் அழைத்து வந்தார்.
தற்போது ச.ம.க.,வை பா.ஜ.,வில் இணைத்துள்ள சரத்குமார், நெல்லை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்பார் என்பதால், வழக்கம் போல, கட்சி அறிவிப்புக்கு முன்பே நயினார் நாகேந்திரன் பிரசாரம் செய்யத் துவங்கி விட்டார்.
பா.ஜ., சார்பில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றால், மத்திய அமைச்சர் ஆகிவிடலாம் என்ற கனவுடன் தனி ரூட் போட்டு நயினார் செயல்படுவதாக கட்சியினர் கூறுகின்றனர்.
வாசகர் கருத்து