பா.ஜ.,வில் இணைந்த காங்., முன்னாள் முதல்வர் மனைவி!
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர், டெல்லியில் பா.ஜ., தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.,யாக இருப்பவர், பிரனீத் கவுர். இவர், இதே தொகுதியில் நான்கு முறை எம்.பி.,யாக பொறுப்பு வகித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்தவர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காங்கிரசில் இருந்து விலகிய அம்ரீந்தர் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். பின், அதனை பா.ஜ., உடன் இணைத்தார். இதனை எதிர்பார்க்காத காங்கிரஸ் கட்சி, அம்ரீந்தர் சிங் விலகிய உடனே அவருக்கு உதவி செய்ததாக கூறி பிரனீத் கவுரையும் கட்சியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்தது.
இந்நிலையில், இன்று பா.ஜ.,வில் பிரனீத் கவுர் இணைந்து கொண்டார். வரும் லோக்சபா தேர்தலில் பாட்டியாலா தொகுதியில் பிரனீத் களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது.
பிரனீத் கவுர் கூறுகையில், "காங்கிரசில் நன்றாக பணியாற்றினேன். தற்போது பா.ஜ.,வில் இணைந்துள்ளேன். பிரதமர் மோடி தலைமையில் எனது தொகுதி, மாநிலம் மற்றும் நாட்டுக்காக பாடுபடுவேன்" என்றார்.
வாசகர் கருத்து