தேர்தல் கமிஷனர்கள் நியமனம் : காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?
புதிய தலைமை தேர்தல் ஆணையர்களாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஞானேஷ் குமார் மற்றும் எஸ்.எஸ்.சாந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தேர்தல் கமிஷனராக இருந்த அருண் கோயல், கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமார் மட்டுமே நீடித்து வருகிறார்.
புதிய தேர்தல் கமிஷனரை நியமிப்பதை தடை செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாகூர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு, நாளை விசாரனைக்கு வர உள்ளது.
இந்நிலையில், புதிய தேர்தல் கமிஷனர்களை நியமிப்பதற்கான தேர்வு வாரிய கூட்டம், பிரதமர் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் லோக்சபா காங்கிரஸ் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின், புதிய தேர்தல் கமிஷனர்களாக கேரளாவை சேர்ந்த ஞானேஷ் குமார், உத்தரகாண்டை சேர்ந்த சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் எதிர்ப்பு
தேர்தல் கமிஷனர்கள் நியமனம் குறித்து ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கூறியதாவது:
ஒரே இரவில் 212 பெயர்களை ஆய்வு செய்து, அவர்களில் திறமையான நபரை தேர்வு செய்வது கடினமானது. அதனால், பட்டியலில் உள்ளவர்களில் திறமையானவர்களை தேர்வு செய்து, அந்தப் பட்டியலை கொடுக்குமாறு கேட்டிருந்தேன். ஆனால், அந்தப் பட்டியல் எனக்கு வரவில்லை.
இதையடுத்து, நேற்று இரவே டெல்லி சென்றேன். இன்று கூட்டம் தொடங்குவதற்கு 10 நிமிடங்கள் முன்பாக பட்டியலை என்னிடம் கொடுத்தனர். சட்ட அமைச்சர் தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்களில் இருந்து ஆறு பேரை எவ்வாறு தேர்வு செய்தனர் என்பதில் தெளிவு இல்லை.
தேர்தல் கமிஷனர்கள் தேர்வு குழுவில் தலைமை நீதிபதி இருந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அமைச்சர் ஒருவர் இடம் பெற்றுள்ளார். இதில், மத்திய அரசுக்குத் தான் பெரும்பான்மை உள்ளது. அவர்கள் என்ன விரும்புகிறார்களோ, அதுதான் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து