ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா : ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகள் என்ன?
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்திருக்கிறார்.
இந்தியா முழுவதும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான சாத்தியங்களை ஆராய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரசின் ஆதிர்ரஞ்சன் சௌத்ரி, குலாம் நபி ஆசாத், திட்டக்குழு முன்னாள் தலைவர் என்.கே.சிங், சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்தக் குழு தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பல தரப்பிடம் கலந்து ஆலோசித்தது. இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக 18626 பக்க அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இன்று அளித்துள்ளது.
அந்த அறிக்கையில், ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல்களை நடத்த வழி உள்ளது எனவும் முன்கூட்டியே திட்டமிட்டால் லோக்சபாவுடன் சட்டசபை தேர்தல்களை நடத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அதற்கேற்ப அரசியலமைப்பில் சட்ட திருத்தங்களை கொண்டு வரவேண்டும். முதல் சுற்றில் லோக்சபா, சட்டசபைகளுக்கும் அடுத்து 100 நாள்களுக்குள் உள்ளாட்சி தேர்தலையும் நடத்தலாம் என ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபாவிலோ, சட்டசபையிலோ நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அந்த ஐந்தாண்டு காலத்துக்குள் புதிய தேர்தலை நடத்தலாம். ஒரேநேரத்தில் தேர்தலை நடத்தும்போது, லோக்சபாவின் பதவிக்காலம் முடியும் வரையில் பிற சட்டசபைகளின் பதவிகளை நீடிக்க வழிவகை செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஏற்படக் கூடிய பயன்கள் குறித்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2029ம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சட்டசபைகளின் ஆயுள்காலத்தை மாற்றி அமைக்கவும் ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து