பா.ஜ., - பன்னீர் சந்திப்பு : நள்ளிரவில் நடந்தது என்ன?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோருடன் மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மேல், சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பேசினர்.
தினகரன் தரப்பில், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, சென்னையில் ஒன்று உள்ளிட்ட ஆறு தொகுதிகள் கேட்கப்பட்டன. பன்னீர்செல்வம், ராமநாதபுரம், தஞ்சை, சிவகங்கை ஆகிய மூன்று தொகுதிகளையும் கேட்டார்.
பன்னீர்செல்வத்திடம், 'ராமநாதபுரம், தஞ்சையில் யாரை வேட்பாளராக நிறுத்த, 'சீட்' கேட்கிறீங்க' என, கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, 'ராமநாதபுரத்தில், தன் மகன் ரவீந்திரநாத்; தஞ்சையில், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் உறவினர் நிறுத்தப்பட உள்ளனர்' என, தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சிவகங்கை தொகுதியை தினகரனும், பன்னீர்செல்வமும் கேட்டுள்ளனர்.
பா.ஜ., தரப்பில், 'ராமநாதபுரத்தில், எங்கள் கட்சியின் முக்கிய வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளார். அதனால் தான் அங்கு பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் வந்தனர். இருவரும், தென் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை மட்டும் கேட்கிறீர்கள். இரு தரப்புக்கும் சேர்த்து ஐந்து தொகுதிகள் வழங்கப்படும்.
'அதில், தினகரனுக்கு, தேனி உட்பட மூன்று தொகுதிகள்; இரண்டு வட மாவட்டங்களில் இருக்கும்; பன்னீர்செல்வத்திற்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்படும்; அதில் ஒன்று, தினகரன் கேட்கும் தொகுதிகளில் உள்ளது. எனவே, பன்னீர்செல்வத்திற்கான தொகுதியை, தினகரனுடன் பேசி இறுதி செய்யலாம்; பா.ஜ.,வுக்கு ஓட்டு சதவீதம் அதிகரிக்க வேண்டும். அதற்கு, தாமரை சின்னம் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும்.
'இதனால் உங்களுக்கு ஒதுக்கப்படும் ஐந்து தொகுதிகளில், தினகரன் போட்டியிட விரும்பும் தேனி தவிர, மற்ற அனைத்து தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் நின்றால் நல்லது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதற்கு இருவரும், 'கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவை தெரிவிக்கிறோம்' என, பா.ஜ., நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து