ராஜ்யசபா சீட், அமைச்சர் பதவி 'நோ': பா.ஜ., நிபந்தனையை ஏற்றது பா.ம.க.,?
லோக்சபா தேர்தலுக்கு பின், தங்களை கூட்டணியில் இருந்து கழற்றி விடுவதை தவிர்க்க, 'லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, 2026 சட்டசபை தேர்தலுக்கும் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தை அறிவிக்க வேண்டும்' என, அ.தி.மு.க.,வுக்கு, பா.ம.க., நிபந்தனை விதித்த தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அ.தி.மு.க., தரப்பில் பதில் தெரிவிக்காமல் மவுனம் காத்ததால், பா.ஜ.,வுடன் பா.ம.க., கூட்டணி அமைகிறது.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த, 2019 லோக்சபா தேர்தல் மற்றும், 2021 சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இருந்தது. சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர், அ.தி.மு.க., தலைமையை விமர்சித்தனர்.
வெளியேறியது
இதை பழனிசாமி விரும்பவில்லை. அத்துடன், சிறுபான்மையினரின் ஓட்டுக்களை இழக்கக்கூடாது என்பதற்காக, பா.ஜ., கூட்டணியில் இருந்து, அ.தி.மு.க., கடந்த ஆண்டு இறுதியில் வெளியேறியது.
இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., - பா.ம.க., வை கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க., முயற்சித்தது. இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ராமதாசை சந்தித்துப் பேசினார்.
இதற்கிடையில், யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாக, ராமதாஸ், தன் உறவினர்களிடமும், முக்கிய நிர்வாகிகளிடமும், சில தினங்களுக்கு முன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
அப்போது, உறவினர் ஒருவர், '2019ல், 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், பா.ம.க., தயவால் தான் அ.தி.மு.க., வெற்றி பெற்றது; அதனால், பழனிசாமியின் ஆட்சியும் நீடித்தது.
கடந்த சட்டசபை தேர்தலில், 66 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற, பா.ம.க., ஓட்டு வங்கியும் முக்கிய காரணம்.'இரு தேர்தல்களிலும் அ.தி.மு.க.,வுக்கு உதவிய நமக்கு முதலில் முக்கியத்துவம் தராமல், வி.சி., - கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தான், முதலில் கூட்டணிபேச்சு நடத்தியது பழனிசாமி தரப்பு.அந்த கட்சிகள் தற்போது கூட்டணிக்கு வராத நிலையில், 2026 தேர்தலின் போது, அ.தி.மு.க., உடன் அணி சேர்ந்தால், நம் நிலை என்னவாகும்' என்று கேட்டுள்ளார்.
'நீங்கள் சொல்வது சரி தான்; அதற்கு என்ன முடிவு எடுக்கலாம்' என்று ராமதாஸ் கேட்டுள்ளார். அதற்கு அவர், 'லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தின் போதே, வரும், 2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க.,வுக்கு, 40 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்ய வேண்டும்; அப்போது தான், அடுத்த தேர்தலுக்கும் நம்மை மதிப்பர்' என்றார்.
இந்த தகவலை கூட்டணி பேச்சுக்கு வந்த, 'மாஜி' அமைச்சரிடம், ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் பழனிசாமியிடம் தெரிவித்து பதில் பெற்றுத்தருவதாக கூறியுள்ளார்.ஆனால், அ.தி.மு.க.,விடம் இருந்து எந்த பதிலும், பா.ம.க.,வுக்கு தரப்படவில்லை. இந்தச் சூழலில் தான், பா.ம.க., உடன் பா.ஜ., கூட்டணி பேச்சு நடத்தியது. இந்த பேச்சு, ராமதாஸ் மகள் வீட்டில் இரு தினங்களுக்கு முன் நடந்தது.
அதில், ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய நபர்களும், பா.ஜ., முக்கியநிர்வாகிகளும் பங்கேற்றனர்.இதில், பா.ம.க.,வுக்கு ஏழு லோக்சபா தொகுதிகள் வழங்க பா.ஜ., சம்மதித்தது. ஆனால், ராஜ்யசபா சீட்டும், அன்புமணிக்கு அமைச்சர் பதவியும் கிடையாது என்றும் தெரிவித்தனர்.ஒருவேளை, பா.ம.க.,வுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் வெற்றி பெறும் நபருக்கு, மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதை, பா.ம.க., தரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால், பா.ஜ., - பா.ம.க., கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு பா.ஜ., வட்டாரங்கள் கூறின.
உறுதி செய்யவில்லை
இதற்கிடையில், தே.மு.தி.க., தரப்புக்கு ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமே ஒதுக்கப்படும் என, பா.ஜ., தரப்பில் உறுதி தரப்பட்டுள்ளது.அதனால், இந்தக் கட்சியுடனும், பா.ஜ., கூட்டணி உறுதியாகும் என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள, இந்த தகவல்களை, பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., தரப்பினர் உறுதி செய்யவில்லை.
வாசகர் கருத்து