சி.ஏ.ஏ., ஆதரவும் பங்காளிகள் 'பல்டி'யும்
தமிழகத்தின் பங்காளி கட்சிகளான தி.மு.க.,வும் - அ.தி.மு.க.,வும், இந்திய குடியுரிமை திருத்த சட்டம் விஷயத்தில், இரட்டை நிலைப்பாடு எடுத்திருப்பதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. இதிலிருந்து இரு கட்சிகளும் இவ்விஷயத்தில், 'பல்டி' அடித்திருப்பது தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'முஸ்லிம் மதத்தினரையும், இலங்கை தமிழரையும் வஞ்சிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு இயற்றியது.
'அதை தி.மு.க., உள்ளிட்ட ஜனநாயக சக்திகள், பார்லிமென்டில் கடுமையாக எதிர்த்தன. ஆனால், பா.ஜ.,வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க., ஆதரித்து ஓட்டளித்ததால் தான், அச்சட்டம் நிறைவேறியது.
'இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தை கொண்டு வந்த பா.ஜ.,வையும், அந்த சட்டத்துக்கு ஆதரவாக ஓட்டளித்த அடிமை அ.தி.மு.க.,வையும், மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; தக்க பாடம் புகட்டுவர்' என்று தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 'மத்திய பா.ஜ., அரசு, சி.ஏ.ஏ., எனப்படும், குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுவதாக, அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தால், நாட்டில் பூர்வகுடி மக்களாக உள்ள எந்த சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என, அ.தி.மு.க., தொடர்ந்துவலியுறுத்தி வந்தது.
'அதன் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக அமல்படுத்தப்படாமல் இருந்த சட்டம், தேர்தல் ஆதாயத்துக்காக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை அ.தி.மு.க., வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த சட்டத்தை பூர்வ குடிமக்களான முஸ்லிம்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக அமல்படுத்த நினைத்தால், அ.தி.மு.க., ஒருபோதும் அனுமதிக்காது' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, பார்லிமென்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ஓட்டளித்த அ.தி.மு.க., இன்று சிறுபான்மையினர் ஓட்டுகளை கவர்வதற்காக, சி.ஏ.ஏ., சட்டத்தை எதிர்ப்பதாக, இரட்டை வேடம் போடுகிறது என, தி.மு.க.,வினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும், 'குடியுரிமை திருத்த சட்டத்தால், இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை' என, பழனிசாமி பேசிய வீடியோவையும், சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கு பழனிசாமி நேற்று பத்திரிகையாளர்களிடம் அளித்த பதில்:
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். பார்லிமென்டில் சட்டம் கொண்டு வரப்பட்ட போது, அ.தி.மு.க., சார்பில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் எதிர்த்து பேசி உள்ளார். அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, மத அடிப்படையில் பிரிக்கக்கூடாது.
கடந்த, 2020ல் சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்தை, தி.மு.க., ஒப்புக் கொள்வதாக பேசியது, பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. மத்தியில், மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த போது ஒரு நிலைப்பாடு. இப்போது ஒரு நிலைப்பாடு.
கடந்த 2020ம் ஆண்டு, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் ஒரு பேட்டியில், 'குடியுரிமை சட்டத்தை எதிர்க்கவில்லை' என்று கூறியுள்ளார். தி.மு.க., தான் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இலங்கையிலிருந்து தமிழகத்தில் குடியேறிய, இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். தமிழகத்தில் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அ.தி.மு.க., எதிர்க்கும் என, சட்டசபையில் பேசிஉள்ளேன்.
அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, மதம், ஜாதி சார்ந்து எந்த நிலைப்பாடும் எடுக்கக்கூடாது. இந்தியா மதச்சார்பற்ற நாடு. மதத்தின் பெயரில் மக்களை பிரிக்கக் கூடாது. அனைவரையும் சமமாகக் கருத வேண்டும். அதுதான் எங்கள் நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம் தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியைக் காண்பித்து, பழனிசாமி பதில் அளித்தார். இரு தரப்பு குற்றச்சாட்டுகளில் இருந்து, இவ்விஷயத்தில் பங்காளி கட்சிகள் இரண்டும் 'பல்டி' அடித்திருப்பது உறுதியாகி உள்ளது.
வாசகர் கருத்து