தேர்தல் பத்திரங்கள் : உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ., சொன்னது என்ன?
தேர்தல் பத்திர விவரங்கள் அடங்கிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாக, உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ., பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
தேர்தல் பத்திர நடைமுறை, சட்டவிரோதம் எனக் கூறி அதனை ரத்து செய்யுமாறு கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில், '2019 முதல் தேர்தல் பத்திரங்களை வழங்கியது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ., வங்கி சமர்ப்பிக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் தேர்தல் பத்திரங்களை எஸ்.பி.ஐ சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து, 'மார்ச் 12 வணிக நேரத்துக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது.
இதையடுத்து, நேற்று மாலை தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.பி.ஐ., அனுப்பி வைத்தது.
இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ., தரப்பில் பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், எஸ்.பி.ஐ., தலைவர் தினேஷ்குமார் குரா கையெழுத்திட்டிருக்கிறார்.
அதில் கூறியிருப்பதாவது :
ஏப்ரல் 14, 2019 முதல் 2024 பிப்ரவரி 15 வரையில் பெறப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவிட்டோம். தேர்தல் ஆணையத்திடம் பென் டிரைவ் ஒன்றும், இரண்டு பி.டி.எப் பைல்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைல்களில் பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டு உள்ளது.
தேர்தல் பத்திரங்களை பணமாக்கிய தேதி, வாங்கிய நபர், பயன்பெற்ற கட்சிகள், தொகை போன்ற விவரங்கள் உள்ளன. இதுவரை, 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதில், 22,030 தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகள், பணமாக மாற்றியுள்ளன.
2019 ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 11 வரையிலான 11 நாள்களில் மட்டும் 3,346 பத்திரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதில், 1,609 பத்திரங்கள், பணமாக மாற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளன.
'தேர்தல் பத்திர விவரங்களை வரும் 15க்குள் இணையத்தளத்தில் பதிவேற்ற வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆவணங்கள் அனைத்தும் பதிவேற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாசகர் கருத்து