முடிவுக்கு வந்த இழுபறி: மஹாராஷ்டிராவில் கூட்டணியை இறுதி செய்த அமித்ஷா
மஹாராஷ்டிராவில் ஆளும் கட்சி கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீட்டில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. அங்கு, பா.ஜ., 31 இடங்களில் போட்டியிட உள்ளது.
மஹாராஷ்டிராவில் பா.ஜ., சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மஹாராஷ்ராவில் உள்ள 48 தொகுதிகளையும் பிரித்துக் கொள்வது தொடர்பாக மூன்று கட்சிகளுக்கும் இடையே பேச்சு நடந்தது. பா.ஜ.,வுடன் பேச்சு நடத்திய இரு கட்சிகளும், தாங்கள் 2019ம் ஆண்டு போட்டியிட்ட அதே தொகுதிகளையே ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தன.
குறிப்பாக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு 13 எம்.பி.,க்கள் இருப்பதால், அவர்கள் அனைவரும் சிட்டிங் தொகுதியை எதிர்பார்த்தனர். இதில், 10 தொகுதிகள் வரை தர உள்ளதாக பா.ஜ., தெரிவித்தது. இதற்கு, பா.ஜ., தரப்பு உடன்படவில்லை.
ஒருகட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டு இரண்டு கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். அதன்பின், தொகுதி பங்கீடு பேச்சுகள் வேகம் எடுத்தன. இந்த சூழலில், இன்று காலை கூட்டணிக் கட்சிகளுக்குள் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசுக்கு பாராமதி, ரெய்க்கார், ஷிருர், பார்பனி ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாராமதி தொகுதியின் சிட்டிங் எம்.பி.,யாக சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளார். அவர் மீண்டும் போட்டியிட்டால், அவரை எதிர்த்து அஜித் பவாரின் மனைவி களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ஜ., 31 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
வாசகர் கருத்து