தி.மு.க.,வுக்கு 40,000 வாக்கு 'அவுட்'
தஞ்சாவூர் ரஹ்மான் நகரில் வசித்து வந்தவர் கமாலுதீன். இவர் மனைவி ரேஹானா பேகம். இவர்களுக்கு அப்சல் ரஹ்மான், ஹாரிஸ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வந்த கமாலுதீன் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் ஆம்னி பஸ்களை இயக்கி வந்தார். பின்னர் டிராவல்ஸ் நிறுவனத்தில், பங்குதாரர்களின் முதலீட்டுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் லாப பணத்தை திருப்பிக் கொடுத்து வந்தார்.
கடந்த 2019ம் ஆண்டு கமாலுதீன் இறந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி தர மறுத்துவிட்டனர். இந்த வகையில், 600 கோடி ரூபாய் வரை மோசடி நடந்ததாக, பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 2019ம் ஆண்டில் கலெக்டர்,எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இவ்வழக்கில், கமாலுதீன், ரேஹானா உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சொந்தமான, 154 வாகனங்களில், 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் அடமானம் வைத்துள்ள, மேலும் 54 வாகனங்களை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.
ஆட்சிக்கு வருவதற்கு முன் இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக இருப்பதாக உள்ளூர் தி.மு.க.,வினர் வாக்குறுதி அளித்தனர். ஆட்சி அமைந்தபின், முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம் இரண்டரை ஆண்டுகளாக மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டோர் புலம்புகின்றனர்.
அதிருப்தியில் உள்ள, பாதிக்கப்பட்டோர் 40,000 பேர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய லோக்சபா தொகுதிகளில் தி.மு.க.,வுக்கு வாக்களிக்க மாட்டோம் என சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஆள் பற்றாக்குறையை காரணம் காட்டி வழக்கு விசாரணையை கிடப்பில் போட்டுள்ளனர். தி.மு.க., முக்கிய புள்ளிகள் பலரும் ராஹத் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுதான் இவ்வழக்கு தொய்வுக்கு காரணம். நாங்கள் இதுவரை 20க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தும் பயனில்லை.
ஷாஜகான், சென்னை.
நான், 7 லட்சம் ரூபாய் இழந்துள்ளேன். காமலுதீன் பினாமி பெயரில் பல சொத்துக்களை முடக்கி விட்டார். ஆனால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவர்களிடம் விசாரிக்கவில்லை. இதற்கு பின்னால் ஆளுங்கட்சியினர் பின்புலமாக இருப்பதாக கூறப்படுகிறது. நாங்கள் ஆளும்கட்சி அமைச்சர்கள், முதல்வர், எம்.எல்.ஏ.,வரை மனு அளித்து விட்டோம் என்றார்.
நூருல் அமீன், கும்பகோணம்
வாசகர் கருத்து