எஸ்.பி.ஐ., மனு தள்ளுபடி; எச்சரித்த உச்ச நீதிமன்றம்: தேர்தல் பத்திர வழக்கில் என்ன நடந்தது?

'தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிட வேண்டும்' என, எஸ்.பி.ஐ., வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திரம் என்ற நடைமுறை, சட்டவிரோதமானது எனக் கூறி அதனை ரத்து செய்யுமாறு கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில், '2019 முதல் தேர்தல் பத்திரங்களை வழங்கியது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ., சமர்ப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், மார்ச் 6ம் தேதி வரையில் எஸ்.பி.ஐ., வங்கிக்கு கால அவகாசம் வழங்கியது.
ஆனால், உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் தேர்தல் பத்திரங்களை எஸ்.பி.ஐ சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து, 'எஸ்.பி.ஐ., வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரி ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம், நேற்று உச்ச நீதிமன்றத்தல் மனு தாக்கல் செய்தது.
எஸ்.பி.ஐ., தரப்பிலோ, 'தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தரவிறக்கம் செய்து அவற்றை வகைப்படுத்தி தருவது சிக்கலான விஷயமாக இருப்பதால் முழு விவரங்களை வெளியிடும் வகையில் ஜூன் 30ம் தேதி வரையில் அவகாசம் வேண்டும்' எனக் கோரியது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பர்டிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது, எஸ்.பி.ஐ., தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, 'எஸ்.பி.ஐ., கிளைகளில் இருந்து தகவல்களை திரட்டி சரிபார்க்க அதிக நேரம் தேவைப்படும். வெவ்வேறு இடங்களில் இருந்து பெறப்படும் தகவல்களை ஒருங்கிணைக்க வேண்டும். தகவல்களை சரிபார்க்காமல் கொடுக்க வேண்டும் என்றால் மூன்று வாரத்தில் எஸ்.பி.ஐ.,யால் திரட்ட முடியும்' என்றார்.
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், 'தேர்தல் பத்திரத்துக்கு நன்கொடை வழங்கியவர், நன்கொடை பெற்றவர்களின் விவரங்களை சரிபார்ப்பதற்கு நாங்கள் உத்தரவிடவில்லை. தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை சேகரித்து சீல் வைக்கப்பட்ட உறையில் தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும்' என்றனர்.
மேலும், 'கடந்த பிப்., 15ம் தேதி வழங்கிய தீர்ப்பில் தகவல்களை திரட்ட வங்கி எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 26 நாள்களில் என்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எஸ்.பி.ஐ தாக்கல் செய்த மனுவில், அப்படி எந்த தகவலும் இல்லையே?' என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
'தேர்தல் பத்திரங்கள் தொடர்பான டிஜிட்டல் ஆவணங்கள் தங்களிடம் இல்லை' என எஸ்.பி.ஐ., தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், 'நீதிமன்றம் கேட்கும்போது அதனை வங்கி வெளியிட்டுத்தான் ஆக வேண்டும்' என்றனர்.
முடிவில், 'ஜூன் 30 வரையில் அவகாசம் கோரிய எஸ்.பி.ஐ., வங்கியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மார்ச் 12 வணிக நேரத்தின் இறுதிக்குள் விவரங்களை வெளியிட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மார்ச் 15ம் தேதிக்குள் இந்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வாசகர் கருத்து