Advertisement

நிபந்தனைகளை ஏற்க மறுத்த பா.ஜ., : வெறுங்கையுடன் திரும்பிய அன்புமணி

லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, பா.ஜ.,வுடன் இறுதிக்கட்ட பேச்சை நடத்தி வரும் அன்புமணி, ராஜ்யசபா இடம், மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதாகவும், இதற்காக வைக்கப்பட்ட நிபந்தனைகளை பா.ஜ., தலைவர்கள் ஏற்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அமைத்தால், தி.மு.க.,வை வீழ்த்த முடியும் எனக்கூறி, அதற்கான முயற்சிகளில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் ஈடுபட்டனர். ஆனால், அது பலனளிக்காத நிலையில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க அன்புமணி தீவிரம் காட்டி வந்தார்.

தமிழகத்தில் பா.ஜ.,வை விட பா.ம.க., பெரிய கட்சி எனக் கூறி வரும் அன்புமணி, அதற்கான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்; பா.ஜ.,வை விட அதிக தொகுதிகள் வேண்டும்; ஒரு ராஜ்யசபா இடம்; மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என பல நிபந்தனைகளை வலியுறுத்தினார். ஆனால், அதற்கு தமிழக பா.ஜ., தலைமை உடன்படவில்லை.

இதற்கிடையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக, டில்லிக்குச் சென்று பா.ஜ., மேலிடத் தலைவர்களை சந்தித்துள்ளார் அன்புமணி.

அப்போது, 'அ.தி.மு.க., இல்லாத பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., இணைய விருப்பமாக இருக்கிறது. ஆனால், பா.ம.க.,வுக்கு கூட்டணியில் 15+1 தொகுதிகள் வேண்டும்' என கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த பா.ஜ., மூத்த தலைவர்களோ, 'தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தமே 15 தொகுதிகளில் தான் பா.ம.க.,வே உள்ளது. அத்தனை தொகுதிகளையும் தங்களுக்கே வேண்டும் என்று கேட்டால், அது எப்படி கூட்டணியாக இருக்கும்?' என கேட்டவர்கள், அன்புமணி வலியுறுத்திய மற்ற நிபந்தனைகளையும் ஏற்க மறுத்து விட்டனர்.

இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங் ஆகியோர் இன்று சென்னை வருகின்றனர். அவர்கள் இருவரும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணியை சந்தித்து கூட்டணி குறித்து பேச உள்ளனர். அப்போது, பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., இணைகிறதா என்பது குறித்த ஒரு முடிவு தெரிந்து விடும்.

இவ்வாறு அக்கட்சியினர் தெரிவித்தனர்.

நட்டாவுடன் வாசன் சந்திப்பு



பா.ஜ., கூட்டணியில் முதல் கட்சியாக இணைந்துள்ள த.மா.கா., தலைவர் வாசன், பா.ஜ., தலைவர் நட்டாவை டில்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, தி.மு.க., தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்ட நிலையில், விரைந்து கூட்டணியை முடிக்க வேண்டும். பா.ம.க., - தே.மு.தி.க., - பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என, வலியுறுத்தியுள்ளார். கூட்டணியை முடிவு செய்வதில் இனியும் தாமதம் தொடர்ந்தால், தேர்தல் பணிகளை பாதிக்கும் என்று, நட்டாவிடம் வாசன் கூறியதாக த.மா.கா., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்