தேர்தல் ஆணையர் பதவி விலகல், பா.ஜ., யுக்தி : தயாநிதி மாறன்
"தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளது, பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது" என, மத்திய சென்னை எம்.பி., தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அரசியல் அமைப்பு சட்டப்படி, தேர்தலில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்பதற்காக 3 தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 துணை தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்.
வரும் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது பல்வேறு கேள்விகளையும் சந்தேகத்தையும் எழுப்புகிறது. இதன் பின்னணியில் மோடியின் யுக்தி உள்ளதாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக, வாக்குப்பதிவு இயந்திரம் மீது அனைவருக்கும் சந்தேகம் உள்ளது. பா.ஜ., வெற்றி பெற்றது உண்மையா... பொய்யா என்ற கேள்வி உள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையும் சரியில்லை. இவற்றை சரிசெய்யும் வகையில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து