ராஜ்யசபா சீட் கேட்டு பிரேமலதா அடம் : கூட்டணி முடிவாகாததால் இழுபறி
அ.தி.மு.க.,வில் ராஜ்யசபா 'சீட்' மறுக்கப்பட்டுள்ள நிலையில், தே.மு.தி.க.,வை வளைக்க பா.ஜ., தரப்பில் பேச்சு நடக்கிறது.
தே.மு.தி.க.,வை அ.தி.மு.க., கூட்டணியில் இணைக்க, இரண்டு கட்ட பேச்சு நடத்தப்பட்டு உள்ளது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவை சந்தித்து முதற்கட்ட பேச்சு நடத்தினர்.
இரண்டாம் கட்ட பேச்சு, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது. அ.தி.மு.க., கூட்டணியில் இணைய திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர், வடசென்னை உள்ளிட்ட நான்கு லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட், இடைத்தேர்தல் நடக்கவுள்ள திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி ஆகியவற்றை ஒதுக்க வேண்டும் என, தே.மு.தி.க., தரப்பில் கேட்கப்பட்டு உள்ளது.
ஆனால், மூன்று லோக்சபா தொகுதிகளை மட்டும் தர அ.தி.மு.க., தலைமை முன்வந்துள்ளது.
ரகசிய பேச்சு
கட்சி அலுவலகத்தில் நடந்த மகளிர் தின விழா விழாவில் பங்கேற்ற பிரேமலதா, தே.மு.தி.க.,விற்கு ராஜ்யசபா சீட் நிச்சயம் வேண்டும் என கறாராக கூறினார். ஆனால், ராஜ்யசபா சீட் வழங்க முடியாத நிலையில் அ.தி.மு.க., உள்ளது.
இதனால், கூட்டணியை முடிவு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில்,தே.மு.தி.க.,வை வளைப்பதற்கான வேலைகளை பா.ஜ., துவக்கியுள்ளது. மத்திய அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர், விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரனுடன், ரகசிய பேச்சில் இறங்கியுள்ளனர்.
அ.தி.மு.க.,விடம் வைத்த அதே நிபந்தனைகளுடன், மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் சில விஷயங்களை செய்து தரவேண்டும் என, தே.மு.தி.க., தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.
இதை மேலிட தலைவர்களிடம் எடுத்துக்கூறி, ஓரிரு நாட்களில் முடிவை தெரிவிப்பதாக பா.ஜ., தரப்பில் உறுதியளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தே.மு.தி.க., முக்கிய நிர்வாகி கூறியதாவது:
விஜயகாந்தின் மறைவின் போது கூடிய கூட்டத்தையும், தற்போது அவரது நினைவிடத்தில் தினசரி கூடும் கூட்டத்தையும் வைத்து, தமக்கு ஓட்டு சதவீதம் அதிகரிக்கும் என கட்சித் தலைமை நம்புகிறது. அதனால் தான், நான்கு லோக்சபா சீட்களும், ஒரு ராஜ்யசபா சீட்டும் வேண்டும் என பிரேமலதா உறுதியாக உள்ளார்.
மறுப்பு
எப்படியும் இந்த முறை லோக்சபா அல்லது ராஜ்யசபாவில் தங்கள் கட்சியைச் சேர்ந்தோர் இடம்பெற வேண்டும் என அவர் விரும்புகிறார். அதனாலேயே, அ.தி.மு.க.,வுடனான பேச்சுவார்த்தையின் போது இதைவலியுறுத்தி உள்ளார்.
ஆனால், ராஜ்யசபா சீட்டுக்கு ஒப்புக்கொள்ள அ.தி.மு.க., தரப்பில் மறுத்துள்ளனர். காரணம், அக்கட்சி சார்பில் ஒருவர் தான் ராஜ்யசபா உறுப்பினராக முடியும் என்ற நிலையில், அதை விட்டுக்கொடுக்க அவர்கள்தயாரில்லை.
இதையடுத்து முன்வந்த பா.ஜ.,விடமும், பிரேமலதா தரப்பில் கட்சி குழுவினர் அதையே வலியுறுத்தி உள்ளனர். வேறு மாநிலத்தில் இருந்து பா.ஜ., தரப்பில் ராஜ்யசபாவுக்கு தன்னை அனுப்ப ஒப்புக் கொண்டால், பா.ஜ.,வுடனான கூட்டணியை இறுதி செய்துவிடலாம் என எண்ணுகிறார் பிரேமலதா. ஆனால், அதை பா.ஜ.,வும் ஏற்குமா என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து