திருதராஷ்டிர ஆலிங்கனம் : அறிவாலயத்தில் நடந்தது என்ன?
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, தி.மு.க., கூட்டணியில் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி இரு லோக்சபா தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா சீட்டையும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு எப்படி சமாதானம் அடைந்தது என்பது குறித்து, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இது குறித்து, ம.நீ.ம., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
மக்கள் நீதி மய்யம் கட்சி இதுவரை 3 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தாலும், லோக்சபா அல்லது சட்டசபை உறுப்பினரை பெற முடியவில்லை. வரும் தேர்தலில் அதுதான் நடிகர் கமலின் இலக்காக இருந்தது.
இரு லோக்சபா தொகுதிகளை பெற வேண்டும் என்ற நோக்கில், ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஆகியோரிடம் மட்டும் கூட்டணி பற்றி பேசி வந்
தார். துவக்கத்தில் அவருக்கு கூட்டணியில் முக்கியத்துவமும் உரிய மரியாதையும் அளிக்கப்படும் என இருவரும் உறுதி அளித்தனர். அதை நம்பி, தனித்துப் போட்டி என்ற முடிவில் இருந்து விலகி விட்டார் கமல்.
தொகுதி பங்கீடு
கடந்த மாத இறுதியில் இருந்து, தமது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் தி.மு.க., பேச்சுவார்த்தை நடத்தியது. காங்., உடனான தொகுதிப் பங்கீட்டை முடிப்பதற்கு முன், கடந்த 9ம் தேதி கமலை அழைத்தார் ஸ்டாலின்.
உடனடியாக அறிவாலயம் சென்றார் கமல். தி.மு.க., முக்கிய தலைவர்கள் கூடவே இருந்தாலும், அவரும், ஸ்டாலினும் மட்டுமே தொகுதிப் பங்கீடு குறித்து பேசினர்.
துவக்கத்தில், தன் கட்சிக்கான முக்கியத்துவம், லோக்சபா தேர்தலில் தான் போட்டியிட வேண்டிய அவசியம் பற்றி கமல் கூறினார்.
அதை ஏற்றுக் கொண்ட ஸ்டாலின், தி.மு.க., கூட்டணிக்கு உள்ள நெருக்கடியையும், தமிழகத்தில் 'இண்டியா' கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற வேண்டிய அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.
அதை கமலும் ஏற்க, 'தேவையானால், கோவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் போட்டியிடுங்கள். முடியாத பட்சத்தில் கண்டிப்பாக ராஜ்யசபா சீட் தருகிறேன்' என்றார். கமலோ, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதை ஏற்கவில்லை.
தொடர்ந்த ஸ்டாலின், 'கடந்த லோக்சபா தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவனின் வெற்றி கடும் இழுபறியானது. அந்த நிலை உங்களுக்கு வரக்கூடாது என நினைக்கிறேன்' என்றார்.
கொஞ்ச நேரம் யோசித்த கமல், 'என்னால் உங்களுக்கு தர்மசங்கடம் வேண்டாம். இந்தத் தேர்தலில், தமிழகத்தில் இண்டியா கூட்டணி வென்றாக வேண்டும்; அதற்கு, தி.மு.க., கூட்டணிக்காக முழுமையாக பாடுபட தயாராக இருக்கிறேன்.
'எங்கள் கட்சி வரும் லோக்சபா தேர்தலில் போட்டி போடாமல் ஒதுங்கிக் கொள்ளும். உங்கள் விருப்பம் போல ராஜ்யசபாவுக்கே செல்கிறேன். தமிழகத்தின் 40 தொகுதிகளுக்கும் சென்று தீவிர பிரசாரம் செய்கிறேன்' என்று கமல் தெளிவாகக் கூறியுள்ளார்.
இருட்டில் டார்ச்லைட்
அதுவரை சீரியசாக இருந்த ஸ்டாலின், அதை எதிர்பார்த்திருந்தவர் போல, கமலுக்கு நன்றி சொல்வது போல கைகூப்பி உள்ளார்.
கூடவே, 'உங்கள் பிரசாரத்துக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தி.மு.க., உங்களுக்கு செய்து கொடுக்கும். வரும் 2025ல் நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில், கட்டாயம் தி.மு.க., சார்பில் உங்களுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும்' எனவும் கூறியிருக்கிறார் ஸ்டாலின். தொடர்ந்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தி.மு.க.,வுடனான தொகுதிப் பங்கீட்டுக்குப் பின் கமல் கூறுகையில், 'லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை. தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுதும் பிரசாரம் செய்ய இருக்கிறேன். தி.மு.க., கூட்டணிக்கு, எங்களின் எல்லா ஒத்துழைப்பும்கிடைக்கும்.
இது, பதவிக்கான விஷயமல்ல; நாட்டுக்கான விஷயம். எனவே, எங்கு கை குலுக்க வேண்டுமோ, அங்கு கை குலுக்கியுள்ளேன்' என்றார்.
வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல், தி.மு.க.,வுடன் ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு கமல் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டதை, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கோவையிலிருந்து கேலியாக 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளனர். நடிகர் கமல் ஏற்கனவே தி.மு.க., அளித்த வாக்குறுதிகளுக்கு எதிராக 'டிவி' பெட்டியில் தன் சின்னமான டார்ச் லைட்டை துாக்கி எறிந்து உடைப்பது போல வீடியோ வெளியிட்டார். அந்த காட்சியை வைத்து, கமலை தற்போது விமர்சித்துள்ளனர். இது, ம.நீ.ம., மற்றும் தி.மு.க., வட்டாரங்களில் கடும்எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
வாசகர் கருத்து