பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி இல்லை: ஒடிஷாவில் பா.ஜ., தனித்துப் போட்டி
ஒடிஷா மாநிலத்தில் தனித்துப் போட்டியிட உள்ளதாக பா.ஜ., அறிவித்துள்ளது. தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால், பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி உறுதியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் சார்பில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் 21 லோக்சபா தொகுதிகளுக்கும், 147 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ளன.
கடந்த 2009 க்கு பின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நவின் பட்நாயக் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இரு கட்சிகளும் இணைந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகின. இதற்காக, டில்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால், ஒடிசாவில் பா.ஜ., தனித்து போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஒடிசா மாநிலத்தில் உள்ள 147 சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட வேண்டும் என நினைக்கிறது. ஆனால், அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என பா.ஜ., முடிவு எடுத்துள்ளது.
லோக்சபா தொகுதிகளிலும் குறைந்தது 15 இடங்களிலாவது வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என பா.ஜ., கோரிக்கை வைத்துள்ளது. இதனையும் பிஜு ஜனதா தளம் ஏற்கவில்லை.
இது குறித்து ஒடிசா மாநில பா.ஜ., தலைவர் சமால் கூறியதாவது:
ஒடிசா மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிட உள்ளது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக எவ்வித பேச்சும் நடக்கவில்லை. எங்கள் பலத்துடன் தனித்து நிற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து