பா.ஜ., கூட்டணியில் தெலுங்கு தேசம்: பரபரப்பாகும் ஆந்திர அரசியல்
தெலுங்கு தேசம் கட்சி - பா.ஜ., இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் முக்கிய இடங்களை கேட்டுப் பெறும் முயற்சியில் பா.ஜ., இறங்கியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் என இரண்டு தேர்தலும் அடுத்த மாதம் நடக்க உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணுக்கும் கூட்டணி குறித்து பா.ஜ., காய் நகர்த்தி வந்தது.
இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் 25 லோக்சபா தொகுதி, 175 சட்டசபை தொகுதி உள்ளது. இதில் 24 சட்டசபை தொகுதிகளும், 3 லோக்சபா தொகுதிகளையும் ஜனசேனா கட்சிக்கு தெலுங்கு தேசம் கட்சி வழங்கி உள்ளது.
சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலுக்கு ஜனசேனா கட்சிக்கு 27 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதால், பா.ஜ., எதிர்பார்தத தொகுதிகள் கிடைக்காத சூழல் இருந்து வந்தது. டில்லியில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் நேற்று முன்தினம் கூட்டணி குறித்து பேச்சு நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, கொள்கை அடிப்படையில் பா.ஜ.,வுடன் இணைந்து செயல்படப் போவதாக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., ரவீந்திர குமார் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் டில்லியில் தேர்தல் கூட்டணி தொடர்பாக மத்திய அசைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி., நட்டாவுடன் நடந்த 2ம் கட்ட பேச்சில் பா.ஜ., -தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சிகளுடன் கூட்டணி அமைக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள முக்கிய தொகுதிகளை பெறுவதற்கு பா.ஜ., முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாசகர் கருத்து