ஹிந்துத்துவம் மீதான விமர்சனம் : அடக்கி வாசிக்கும் தி.மு.க.,

லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால், ஹிந்து கடவுள்கள் பற்றியோ, ஹிந்துத்துவம் பற்றியோ சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கல்களை உருவாக்க வேண்டாம் என, தலைவர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் தி.மு.க., தலைமை வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, தி.மு.க., மேடைகளில் ஹிந்துத்துவம் மீதான விமர்சனம் அடக்கி வாசிக்கப்படுகிறது.
தி.மு.க., என்றாலே ஹிந்து விரோத கட்சி என்று முத்திரை குத்தும் அளவுக்கு அதன் முதல் தலைவர் அண்ணாதுரை துவங்கி, இன்றைய அமைச்சர் உதயநிதி வரை அனைத்து தலைவர்களும், பிரமுகர்களும் வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டனர்; ஈடுபட்டும் வருகின்றனர்.
ராஜாவால் சர்ச்சை
சமீபத்தில் சனாதனம் பற்றிய அமைச்சர் உதயநிதியின் பேச்சு, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுதும் ஹிந்துக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் வந்தபோது, அமைச்சர் தன் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என நீதிபதி அறிவுரை வழங்கினார்.
இன்னொரு பக்கம், நீலகிரி எம்.பி., ராஜா, 'இந்தியா ஒரு தேசமல்ல; ராமருக்கு நாங்கள் எதிரி' என்று வெறுப்புணர்வை பரப்பும் வகையில் பேசிய பேச்சு, சிக்கலை ஏற்படுத்திஉள்ளது.
இதுகுறித்து வட மாநிலங்களில் விவாதங்கள் நடத்திய 'டிவி' சேனல்கள், இந்த விவகாரத்தில் 'இண்டியா' கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்று கேள்விகள் எழுப்பி, பிரச்னையை ஊதிப் பெரிதாக்கின.
ஹிந்துத்துவம், ஹிந்து கடவுள்கள் மீதான கடும் விமர்சனங்கள், பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டுகளை திருப்பி விடும் என தி.மு.க., தலைமை அஞ்சுகிறது. அதனால், லோக்சபா தேர்தல் முடியும் வரையில், ஹிந்துத்துவம், ஹிந்து கடவுள்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேச வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது. மேலும், தி.மு.க., ஆட்சியில் ஹிந்து கோவில்களுக்கு செய்யப்பட்ட பணிகளை பட்டியலிட்டு, 'ஹிந்து எதிர்ப்பு கட்சி' எனும் தோற்றத்தை உடைக்க வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, அக்கட்சியின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் மேடைகளில் தற்போது அடக்கி வாசித்து வருகின்றனர்.
கவர்ச்சி திட்டங்கள்
ஹிந்துக்கள் ஓட்டுகளை கவர தி.மு.க.,வின் திட்டங்கள்:
ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கடந்த 2022ம் ஆண்டு, காசிக்கு 300 நபர்களை ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லும் திட்டம். இதற்காக, துறை சார்பில் 75 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
கடந்த ஜனவரி முதல், ஆண்டுக்கு 1,000 மூத்த குடிமக்களை ஐந்து முறை, அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலாவாக அழைத்துச் செல்லும் திட்டத்தை, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்
750 ரூபாய் கட்டணத்தில், வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கும்பகோணம் பகுதியில் உள்ள நவக்கிரக கோவில்களுக்கு ஒரே பேருந்தில் சென்று வரும் திட்டம். இது, கடந்த பிப்ரவரி மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரால் அறிவிக்கப்பட்டது
ராமர் வழிபட்ட புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் ஒன்பது இடங்களை, வாரத்தில் சனி, ஞாயிறுகளில், 80 ரூபாய் கட்டணத்தில் சுற்றிப் பார்க்க வசதியாக, அரசுப் பேருந்துகள் இயக்கும் திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று முன்தினம் துவங்கி வைத்தார்.
சிலர் எங்களை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான கட்சி என பிரசாரம் செய்கின்றனர். நாங்கள் தான் 6,000 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளோம். நவக்கிரக கோவில்களுக்கு குறைந்த கட்டணத்தில் பஸ்கள் இயக்கியுள்ளோம். நாங்கள் எதற்கும் எதிரானவர்கள் அல்ல.
சிவசங்கர்,
அமைச்சர், போக்குவரத்து துறை
தி.மு.க., ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பொய்பிரசாரத்தை முறியடிப்போம். இந்தியாவில் எல்லாரும்ஹிந்துக்கள் தான். ஹிந்துக்கள் யாரும் ஹிந்துக்களுக்கு எதிரி கிடையாது. ஆனால், ஹிந்துத்துவா என்பது, மனிதனைமனிதனாக மதிக்காமல், அவனை மிகவும் இழிவுபடுத்துவது.
சண்முகம்,
தொ.மு.ச., பேரவை செயலர்
வாசகர் கருத்து