தி.மு.க.,வில் ஒரு வண்டு முருகன்

எல்லாம் அவன் செயல் படத்தில் வட்டச்செயலர் வண்டு முருகன் பெயரில் வடிவேலு நடித்திருந்தார். இந்த வண்டு முருகன் கேரக்டர், அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்து விட்டது. இன்றும் கட்சியில் பலரை வட்டச்செயலர் வண்டு முருகன் என புனை பெயரில் அழைப்பதும் வழக்கமாகி விட்டது.
இந்நிலையில், தி.மு.க.,வில் உண்மையிலேயே வண்டு முருகன் என்ற பெயரில் கட்சி நிர்வாகி ஒருவர் இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேரூராட்சி தி.மு.க., சார்பில், தும்மலக்குண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன், பொதுக்கூட்ட நோட்டீசில் இருந்த உள்ளூர் நிர்வாகிகள் பெயர்களை வரிசையாக படித்தபோது, வண்டு முருகன் பெயர் இருந்ததைப் பார்த்து, 'அடடே இங்கேயும் ஒரு வண்டு முருகனா...?' என வியப்படைந்தார்.
வடமதுரையைச் சேர்ந்தவர் முருகன், 48; தி.மு.க., வடமதுரை பேரூராட்சி ஒன்றாவது வார்டு முகவராக உள்ளார்.
இரவு நேரத்திலும் கூட, பொதுப் பிரச்னைகள் குறித்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகளுக்கு போன் செய்து பேசி தீர்வு காண்பார் என்பதால், கட்சி வட்டாரத்தில் இவரை, 'வண்டு' முருகன் என்று அடைமொழி வைத்து அழைக்க ஆரம்பித்து விட்டதாக தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து