'இதுதான் நமக்கு கடைசி தேர்தல்' தி.மு.க., மேடைகளில் திடீர் அலறல்
'யாரை கண்டும் எங்களுக்கு பயமில்லை' என்று பேசி வந்த தி.மு.க., தலைவர்கள், தற்போது மேடைகளில், 'இது தான் நமக்கு கடைசி தேர்தல்' என்று அலறி வருகின்றனர்.
தமிழகத்தில் பா.ஜ., வெற்றி பெற வேண்டும் என்பதில் அக்கட்சி மேலிடம் உறுதியாக உள்ளது; அதற்கேற்ப பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்' யாத்திரையை நடத்தினார். பிரதமர் மோடியும் அவ்வப்போது தமிழகத்துக்கு வந்து திட்டங்களை துவக்கி வைத்து, தமிழ்மொழியின் பெருமை, தமிழ்ப் பண்பாட்டின் அருமை என மக்களின் உணர்வுகளைத் தொட்டு பேசி வருகிறார்.
அதுவரையிலும், 'எங்களுக்கு யாரை கண்டும் பயமில்லை' என்று தி.மு.க, தலைவர்கள் பேசி வந்தனர்; பேட்டி கொடுத்தனர்.
சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, 'மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்த விடுவதில்லை. தேர்தலுக்கு பின் தமிழகத்தில் தி.மு.க., இருக்காது,' என, கடுமையாகப் பேசினார்.
இதையடுத்து, தி.மு.க., தலைவர்கள் மற்றும் மேடைப் பேச்சாளர்களின் பேச்சு வேறு திசையில் செல்லத் தொடங்கியிருக்கிறது.
சமீபத்தில் பொள்ளாச்சியில், தி.மு.க., சார்பில் நடந்த, 'உரிமை மீட்க ஸ்டாலின் குரல்' என்ற நிகழ்ச்சியில் பேசிய எம்.பி., சிவா, ''இந்த தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், நாட்டு மக்களின் எதிர்காலம் நிம்மதியாக இருக்காது. இது சோதனை காலம். எவ்வளவு பெரிய சதி வந்தாலும் முறியடித்து, மக்கள் சக்தியை கொண்டு வெற்றி பெற வேண்டும். கட்சியினர் உறக்கம் கொள்ளாமல் பாடுபட வேண்டும்,'' என்றார்.
தி.மு.க., தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ''ஒருவேளை பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இனி தேர்தலே நடக்காது; அதிபர் ஆட்சி தான்,'' என்றார்.
இது போன்று கட்சி நிர்வாகிகள் பேச்சை கேட்கும் தொண்டர்கள், 'இதுவரை இல்லாத வகையில், இந்த தேர்தலில் ஏன் இவ்வளவு பதற்றம்?' என குழப்பமடைந்துள்ளனர்.
இது குறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது:
அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். பொன்முடி அமைச்சர் பதவி இழந்ததுடன், எம்.எல்.ஏ., பதவியும் பறிபோனது. தற்போது அமைச்சர் பெரியசாமி வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது போன்று அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகளால், எங்கள் கட்சியில் பதற்றம் நிலவுகிறது. போதாக்குறைக்கு போதைப்பொருள் கடத்தல் சம்பவமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த விஷயங்களையெல்லாம் வைத்து, தி.மு.க., தரப்பு மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அதைக் குறிப்பிட்டு தொடர்ந்து மோடி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் மேடைகளில் பேசி வருகின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரிதாக எடுபட்டுள்ளதால், தேர்தலில் எதிரொலிக்குமோ என்ற அச்சம் உள்ளது. இதைத்தான் மேடைகளில் கட்சித் தலைவர்களும் எதிரொலிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து