அ.தி.மு.க.,வா - பா.ஜ.,வா : எந்தப் பக்கம் பா.ம.க., சாயும்?
லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து, நாளை மறுநாள் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் முடிவெடுப்பார் என, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என, பிப்ரவரி 1ல் நடந்த பா.ம.க., பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரமும் ராமதாசுக்கு வழங்கப்பட்டது.
அதன்படி, அ.தி.மு.க., - பா.ஜ., இரு கட்சிகளுடனும் பா.ம.க., பேசி வருகிறது; இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
கடந்த 2016ல், தமிழகத்தில் மாநில கட்சி அந்தஸ்தை இழந்த பா.ம.க., புதுச்சேரியில் மாநில அந்தஸ்து பெற்ற கட்சியாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு புதுச்சேரியிலும் மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது.
எனவே, வரும் லோக்சபா தேர்தலில் குறைந்தது, இரண்டு எம்.பி,க்களை பெற்றால், மாநில கட்சி அந்தஸ்தை பா.ம.க., பெறும். எனவே, அ.தி.மு.க., கூட்டணியில் சேர வேண்டும் என, அக்கட்சியில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் பதவி உறுதி தந்தால், பா.ஜ.,வுடன் சேரலாம் என்று, அன்புமணி தரப்பினர் கூறுகின்றனர்.
இந்நிலையில், இன்று சென்னை வரும் ராமதாஸ், கூட்டணி தொடர்பாக முக்கியமான சிலரை சந்தித்து பேச இருப்பதாகவும், நாளை மறுநாள் பா.ம.க., எந்தப் பக்கம் செல்லும் என்பது தெரிந்து விடும் என்றும், அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து