லோக்சபா தேர்தல்: பா.ஜ.,வின் பழைய உத்தி பலிக்குமா?
பிற மாநிலங்களில் உள்ள அளவுக்கு கோவாவில் மோடி மேஜிக் செல்லுபடியாகவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சியை உடைத்தும், சிறிய கட்சிகளை அரவணைத்தும் கடந்த 2017 முதல் கோவாவில் ஆட்சியை பா.ஜ., தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. அதே உத்தியை வரும் லோக்சபா தேர்தலிலும் பா.ஜ., கையில் எடுக்கப் போகிறது என கூறப்படுகிறது.
கோவாவில், முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த சட்டசபையில் மொத்தம் 40 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஆளும் பா.ஜ., கூட்டணியை சேர்ந்தவர்கள் 33 பேர். இதில், பா.ஜ., - 20, மஹாராஷ்டிராவாடி கோமந்தக் - இரண்டு, சுயேச்சைகள் - மூன்று, காங்.,கில் இருந்து தாவியவர்கள் - எட்டு பேர் உள்ளனர்.
இங்கு வடக்கு மற்றும் தெற்கு கோவா என இரு லோக்சபா தொகுதிகள் உள்ளன. வடக்கு கோவாஎம்.பி.,யாக பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் உள்ளார்.
தெற்கு கோவா எம்.பி., யாக காங்.,கைச் சேர்ந்தபிரான்சிஸ்கோ சர்டினா உள்ளார். இவர் முன்னாள் முதல்வர்.
வடக்கு கோவாவில் ஹிந்துக்கள் 76 சதவீதம் பேர் பெரும்பான்மை வகிக்கின்றனர். எனவே, அது பா.ஜ.,வின் கோட்டையாக உள்ளது. தெற்கு கோவாவை பொறுத்தவரை கிறிஸ்துவர்கள் 36 சதவீதமும், முஸ்லிம்கள் 10 சதவீதமும் உள்ளனர். இது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்து வந்தது.
தற்போது சூதாட்ட சொகுசு விடுதிகள், சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் கோவா அல்லாத பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அங்கு அதிக அளவில் குடியேறி உள்ளனர்.
இவர்களில் ஹிந்துக்கள் பெரும்பான்மை வகிப்பதால், அவர்கள் ஓட்டு நிச்சயம் பா.ஜ.,வுக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது.
வடக்கு கோவாவில் பா.ஜ.,வின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி என்றே கட்சி தலைமை நம்புகிறது. தெற்கு கோவாவில், காங்., தனித்து நின்றால் வெற்றி பெறுவது கடினம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த 2022 சட்டசபை தேர்தலில், தனித்து நின்றதால் காங்., தோல்வியடைந்தது. கிறிஸ்துவர்கள் ஓட்டு பிரிந்ததே காங்.,கின் தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. அதே நிலை தான் லோக்சபா தேர்தலிலும் நிகழ உள்ளது.
வேட்பாளரை அறிவித்து வேலையை துவங்கிய ஆம் ஆத்மி, தெற்கு கோவா தொகுதியை காங்.,குக்கு விட்டுத்தர தற்போது சம்மதித்துள்ளது.
ஆனாலும் காங்.,குக்கு மற்றொரு தலைவலி காத்திருக்கிறது. தெற்கு கோவாவில் பா.ஜ.,வுக்கு 18எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.இதில் பெரும்பாலானவர்கள் காங்.,கில் இருந்து பா.ஜ.,வுக்கு மாறியவர்கள்.
அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கை வைத்து தெற்கு கோவா தொகுதியை தன்வசப்படுத்த பா.ஜ., முயற்சித்து வருகிறது.
வாசகர் கருத்து