தயாநிதி மாறனுக்கு எதிர்ப்பு : கட்சியின் உத்தரவு என்ன?
தொகுதி பக்கமே முகம் காட்டாத தயாநிதிக்கு, மத்திய சென்னையில் போட்டியிட மீண்டும் 'சீட்' கொடுக்க வேண்டாம் என, தி.மு.க., வட்டாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அண்ணா நகர், வில்லி வாக்கம், எழும்பூர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, துறைமுகம், ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது, மத்திய சென்னை லோக்சபா தொகுதி. இதன் எம்.பி.,யாக தயாநிதி உள்ளார்.
எம்.பி.,யாக இருந்தும் தொகுதி பக்கமே எட்டிப் பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. ஆனாலும், அவருக்கே மீண்டும் அந்தத் தொகுதியை ஒதுக்கப்பட விரும்புவதாக வெளியான செய்தியை கண்டு கட்சியினர் கொதித்துப் போய் உள்ளனர்.
இதுகுறித்து தொகுதி தி.மு.க.,வினர் கூறியதாவது:
தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை; லோக்சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை. வெள்ள நிவாரணம், மகளிர் உரிமைத்தொகை ஆகியவற்றை தொகுதியில் இருக்கும் உரிய பயனாளிகளுக்கு கிடைக்கச் செய்யவில்லை என்று ஏகப்பட்ட அதிருப்தி உள்ளது.
பொதுமக்கள் மட்டுமின்றி, தி.மு.க.,வின் பகுதி செயலர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்கூட, அவரை சந்திக்க முடியாதவராக இருக்கிறார். தேர்தல் வருவதால், சில வாரங்களாக தொகுதிபக்கம் சுற்றுகிறார். திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தொகுதியில் முறையாக செயல்படாத தயாநிதி குறித்து, கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளோம். ஆனால் மீண்டும் அவருக்கே சீட்டு வழங்க இருப்பதாகவும், அதற்கான பணிகளைச் செய்யுங்கள் என கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. என்ன செய்வது என புரியாமல் தவிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து