Advertisement

'செவிட்டு' ஜோதிடர் சொன்னது என்ன? கள்ளக்குறிச்சியில் களமிறங்கும் பிரேமலதா

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா போட்டியிட்டால் வெற்றி உறுதி என, அவரது ஜாதகத்தை கணித்து, 'செவிட்டு' ஜோதிடர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபை, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கண்ட தே.மு.தி.க.,வுக்கு, லோக்சபா தேர்தல் வெற்றி தான் இதுவரை கைகூடவில்லை. 2009 முதல் 2019 வரை, தனித்தும், கூட்டணி அமைத்தும் போட்டியிட்ட போதிலும், அக்கட்சியால் வெற்றியை ருசிக்க முடியவில்லை.

இந்த தேர்தலிலாவது ஒரு வெற்றிக்கனியை பறிக்கத் துடிக்கும் பிரேமலதா, எந்த தொகுதியில் நின்றால் வெற்றி கிடைக்கும் என, தன் ஆஸ்தான, 'செவிட்டு' ஜோதிடரிடம் ஜாதகத்தை கொடுத்து, சாதக பாதக பலன்களை கேட்டுள்ளார்.

பிரேமலதாவின் தம்பி சுதீஷ், ஏற்கனவே இரண்டு முறை லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்து விட்டார். இம்முறை அவரை நிறுத்த விரும்பாத பிரேமலதா, தானே களமிறங்கும் முடிவில் இருக்கிறார்.

மேலும், கணவர் விஜயகாந்த் மறைவால், கள்ளக்குறிச்சி தொகுதி மக்கள் மத்தியில், தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்றும் கருதுகிறார். அந்த நம்பிக்கையில் ஜாதகம் பார்த்த பிரேமலதாவுக்கு, சாதகமான பலன்களே நடக்கும் என்று, 'செவிட்டு' ஜோதிடரும் அடித்து சொல்லியிருக்கிறார்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெறலாம். மத்திய அமைச்சர் உள்ளிட்ட அதிகாரமிக்க முக்கிய பதவிகளும் கிடைக்கும்' என்றும், அவர் கணித்துக் கூறியிருக்கிறார். அதன்படியே, அ.தி.மு.க.,வுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு நடந்தபோது, கள்ளக்குறிச்சி தொகுதியை கட்டாயம் தந்தாக வேண்டும் என பிரேமலதா, 'கண்டிஷன்' போட்டுள்ளார்.

யார் அவர்?

விஜயகாந்த் நடிகராக வலம் வந்த காலத்தில் இருந்தே, அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர், இந்த செவிட்டு ஜோதிடர்; 60 வயதான அவர் தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர். விஜயகாந்தை பார்க்க, சென்னைக்கு எப்போதும் பஸ்சில் தான் வருவார். சென்னையைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர்கள், ஹோட்டல் உரிமையாளர்களுக்கும், அந்த ஜோதிடர் பழக்கமானவர் என்று கூறப்படுகிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்