20% ஓட்டுகள் எனும் மேஜிக் எண்; தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து விட்டதா ?
தமிழகத்தில் 20 சதவீதம் வரை ஓட்டுகள் கிடைக்கும் என்ற கருத்துக் கணிப்புகளால் பா.ஜ., உற்சாகமாக உள்ளது. அது சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த, 1951ல் பாரதிய ஜன சங்கம் துவங்கப்பட்ட போதே, தமிழகத்திலும் அக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது. சட்ட மேலவை உறுப்பினராக இருந்த வி.கே.ஜான், ஜன சங்கத்தின் முதல் தமிழக தலைவராக நியமிக்கப்பட்டார்.
*1952 முதல் லோக்சபா தேர்தலில், ஜனசங்கம், சென்னை மாகாணத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது
* 1967 சட்டசபை தேர்தலில், 24 தொகுதிகளில் போட்டியிட்ட ஜன சங்கம், 0.15 சதவீத ஓட்டுகளை பெற்றது
l* 1980ல் பா.ஜ., துவங்கப்பட்ட பின், சந்தித்த முதல் சட்டசபை தேர்தலில், 10 தொகுதிகளில் போட்டியிட்டு 0.07 சதவீத ஓட்டுகளை பெற்றது
* 1989 லோக்சபா தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் அப்போதைய பா.ஜ., வேட்பாளரும், இன்றைய எம்.எல்.ஏ.,வான எம்.ஆர். காந்தி, 39,164 ஓட்டுகளை பெற்றார்
* ஹிந்து முன்னணி' முழுநேர ஊழியராக இருந்த பொன். ராதாகிருஷ்ணன் 1991ல், நாகர்கோவில் தொகுதியில், 1, 20, 029 ஓட்டுகளை பெற்றார். தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு நம்பிக்கை அளித்த முதல் தேர்தல் இது
* 1996ல் நாகர்கோவிலில் 1,30, 753; திருச்செந்துாரில் 79,051; தென்காசியில் 52,120; கோவையில் 43,283 என கணிசமான ஓட்டுகளை பெற்று தமிழக அரசியலில் பா.ஜ., தன் இருப்பை வெளிப்படுத்தியது
*1998 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., கோவை, நீலகிரி, திருச்சியில் வென்றது
* 1999 தி.மு.க., கூட்டணியில் கோவை, நீலகிரி, திருச்சி, நாகர்கோவிலில் பா.ஜ., வென்றது
* 2001 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியிலும், 2004 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியிலும் பா.ஜ., போட்டியிட்டது
* 2006 சட்டசபை, 2009 லோக்சபா, 2011 சட்டசபை தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட பா.ஜ., ஓட்டு சதவீதம் 3 சதவீதத்தை தாண்டவில்லை
* 2014ல் தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து, மூன்றாவது அணியை, பா.ஜ., உருவாக்கியது. இந்த கூட்டணி, 18 சதவீத ஓட்டுகளுடன், இரண்டு இடங்களில் வென்றது. இந்த தேர்தலில் தனித்து களம் கண்ட தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் ஓரிடம் கூட கிடைக்கவில்லை
* 2016 சட்டசபை தேர்தலில் 188 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., 12, 28, 704 ஓட்டுகள் அதாவது 2.84 சதவீதம் பெற்றது
தமிழகத்தில் பா.ஜ., வாங்கிய அதிகபட்ச ஓட்டு சதவீதம் இதுதான். ஜெயலலிதா மறைவுக்கு பின் 2019 லோக்சபா, 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட, பா.ஜ.,வுக்கு நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
கடந்த 2021 ஜூலையில் தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின், அதிரடியாக செயல்பட துவங்கினார்.
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி தொடர்ந்த போதும், 2022 பிப்ரவரியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., தனித்துப் போட்டியிட்டு 5 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகளைப் பெற்றது.
அண்ணாமலை மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து, பா.ஜ.,வுடனான கூட்டணியை அ.தி.மு.க., முறித்துக் கொண்டது.
தற்போதைய நிலையில் பா.ஜ., கூட்டணியில் த.மா.கா., உள்ளிட்ட சிறிய கட்சிகளே உள்ளன. பா.ம.க., - தே.மு.தி.க.,வுடன் பேச்சு நடத்தி வருகிறது.
இந்நிலையில் பல்வேறு கருத்துக் கணிப்புகள் தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு 18 - 22 சதவீதம் வரை ஓட்டுகள் கிடைக்கும் என கணித்துள்ளன. இதனால், பா.ஜ., உற்சாகமாக களமிறங்கினாலும், இதுவரை நடந்த தேர்தல்களின் புள்ளிவிபரங்கள் அதற்கு நேர் மாறாக உள்ளன.
ஆனால், 'எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த முறை சூழல் முற்றிலும் மாறுபட்டுள்ளது.
'மோடி மீண்டும் பிரதமராவது உறுதியான சூழல் இருப்பதால், நடுநிலை, முதல் முறை, 40 வயதுக்கு கீழே உள்ள வாக்காளர்களும் பா.ஜ.,வுக்கே ஓட்டளிப்பார்கள்' என, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து