ஆளுக்கு '3' டிமான்ட்.... அதிர்ச்சி கொடுத்த தி.மு.க., :தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல்

சென்னை: தி.மு.க., கூட்டணியில் உள்ள இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், லோக்சபா தேர்தலில் தலா இரு தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
தி.மு.க., அணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த வரிசையில் சேர மக்கள் நீதி மய்யம் கட்சியும் காத்திருக்கிறது.
ஆளுக்கு '3' டிமாண்ட்
தொகுதி பங்கீடு குறித்து, தி.மு.க., குழுவினர் இரண்டு சுற்று பேச்சை முடித்துள்ளனர். வரும் 4ம் தேதிக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து, ஒப்பந்தத்தில் கையெழுத்து பெறுமாறு, தி.மு.க., குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, நேற்று சென்னை அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை அழைத்து, தி.மு.க., குழுவினர் பேச்சு நடத்தினர். இரு கட்சிகளும் தலா மூன்று தொகுதிகள் கேட்டு விருப்பப் பட்டியல் அளித்திருந்தன.
கடந்த தேர்தலை போலவே இம்முறையும் தலா இரு தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என, தி.மு.க., தரப்பில் நேற்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மேல் பேச வழியில்லை என்ற நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் தி.மு.க.,வின் முடிவை ஏற்க சம்மதித்தன. உடனே ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இரு கட்சிகளுக்கும் ஒதுக்கப்படும் தொகுதிகள் எவை என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஒப்பந்தம் கையெழுத்தான பின், நிருபர்களிடம் முத்தரசன் கூறியதாவது:
இது மிக மிக முக்கியமான தேர்தல். ஜனநாயகத்தை காப்பாற்ற, மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதனால், கேட்ட தொகுதிகளைவிட குறைவாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டோம்.
மத்தியில் அமைந்துள்ள சர்வாதிகார ஆட்சியை அகற்ற, தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தற்போது, தொகுதி உடன்பாடு சுமுகமாக நடந்துள்ளது; எந்த தொகுதிகள் என்று பின்னர் பேசி முடிவு எடுக்கப்படும்.கூட்டணிக்குள் எந்த சிக்கலும் இல்லை; எந்த சிக்கலும் ஏற்படுத்த முடியாது. இவ்வாறு முத்தரசன் கூறினார்.
40ம் எங்களதே
பாலகிருஷ்ணன் கூறியதாவது:
கூடுதல் தொகுதிகள் கேட்டோம். வேறு சில கட்சிகளும் சேர இருப்பதால், கூடுதல் தொகுதி தர வழியில்லை என தெரிவித்தனர். மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சில கட்சிகள், தி.மு.க., கூட்டணியில் இணைவதற்கு தயாராக உள்ளன.
மற்ற கட்சிகளுடனும் தொகுதி உடன்பாடு முடித்த பின், எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டி என்பதை முடிவு செய்வோம். 40 தொகுதிகளையும் எங்கள் தொகுதிகளாகவே கருதி வெற்றிக்கு பாடுபடுவோம்.
இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்
தொகுதி உடன்பாடு!'
தி.மு.க., கூட்டணியில், முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு, தலா ஒரு தொகுதியும்; இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, தலா இரு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கை இன்னும் முடிவாகவில்லை. இது குறித்து, தி.மு.க., தொகுதி பங்கீடு குழு சார்பில், அமைச்சர் பெரியசாமி கூறியதாவது:ஒரு வாரத்திற்குள் தொகுதி உடன்பாடு முடிந்து விடும். காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை பேச்சு நடத்த வருவர். ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு பேச்சு சுமுகமாக முடிந்து விடும்.
வாசகர் கருத்து