'டார்ச் லைட்' உற்சாகம்; கனிமொழி பெயரை தவிர்த்த மோடி! :தூத்துக்குடி விழா ஹைலைட்ஸ்
"தடைகளை தாண்டி தமிழகத்திற்கு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியே தீரும்" என, தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
தமிழகத்தில் 17.300 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை தமிழகத்தின் தூத்துக்குடி எழுதி வருகிறது. பல திட்டங்கள் துவங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது. வளர்ந்த இந்தியாவின் வரைபடத்தின் முக்கிய அங்கமாக இருக்கும்.
அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி ஆகியவற்றின் எடுத்துக்காட்டு இது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை பார்க்க முடிகிறது. இந்த திட்டங்கள் தூத்துக்குடியில் இருந்தாலும், நாட்டின் பல பகுதிகளில் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும்.
இந்த தேசம் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி பயணித்து கொண்டுள்ளது. வளர்ச்சியடைந்த நாட்டில், வளர்ச்சியடைந்த தமிழகத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. முன்பு நான் அளித்த வாக்குறுதி இன்று நிறைவேறி உள்ளது. கடல் வாணிபத்திற்கு புத்துயிர் அளிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் திட்டங்களால் தமிழகத்தில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
கசப்பான உண்மை
இன்று தமிழக மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஓர் உண்மையை சொல்ல விரும்புகிறேன். நான் நேரடியாக குற்றம்சாட்ட விரும்புகிறேன். அவை கசப்பான உண்மைகள். இன்று தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் டில்லியிலும் ஆட்சியில் இருந்தார்கள். மத்தியில் ஆட்சியில் இருந்த போது தமிழகத்தின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை.
காங்கிரஸ் ஆட்சியின் போது பல தசாப்தங்களாக கோரிக்கையாக இருந்த அனைத்தையும் பா.ஜ., அரசு நிறைவேற்றி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் காகித வடிவில் இருந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
தமிழக மக்களின் நன்கொடை
உங்கள் பிரதம சேவகன் நான். பல வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறேன். இன்று இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் கப்பல் தன் பயணத்தை துவங்கி இருக்கிறது. காசியின் கங்கையாற்றின் மீது இந்த படகு விரைவில் பயணத்தை துவங்க உள்ளது. காசிக்கும் தமிழகத்திற்கும் இடையே இருக்கும் நல்ல உறவு மேலும் உறுதியாகி உள்ளது. என்னுடைய தொகுதியான காசிக்கும், தமிழக மக்கள் அளிக்கும் நன்கொடை இதுவாகும்.
தமிழக தென் மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன. புதிய ரயில்களால் பயண நேரம் குறையும் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பர். இன்று இங்கே சாலை, ரயில் திட்டங்கள் சிலவும் துவங்கப்பட்டு உள்ளன. ரயில்வே, சாலை, நீர் வழி போக்குவரத்தின் நோக்கம் ஒன்று தான் தமிழகம் வளர்ச்சி அடையும், நாடு வளர்ச்சி அடையும் என்பதே நோக்கம்.
இந்த திட்டங்களுக்காக தமிழக மக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். நாட்டின் முக்கியமான கலங்கரை விளக்கங்களை சுற்றுலா தலங்களாக மாற்ற முடியும் என கூறியிருந்தேன். இன்று அந்த கனவு நனவாகி உள்ளது. 75 கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா தலமாகி உள்ளது.
மத்திய அரசு திட்டங்கள் மூலம் தமிழகத்தில் சாலை வழி இணைப்புகள் மேலும் சிறப்பாக மாறி உள்ளது. புதிய சகாப்தம் படைக்க உள்ளது. நாட்டின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. 4,500 கோடி திட்டங்களால் தமிழகத்தில் பயண நேரம் குறையும். தொடர்பு மேம்படும். 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சலைகள் இணைப்பு அதிகரித்து உள்ளது.
தமிழக அரசு அனுமதிக்காது
வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக, நான் பேசுவது ஒரு கட்சியினுடைய அல்லது எனது சித்தாந்தம் அல்ல. இது முன்னேற்றத்திற்கான கோட்பாடு. இதனை எல்லாம் செய்தியாக தமிழக பத்திரிகைகள் வெளியிடாது. ஏனென்றால் தமிழகத்தில் உள்ள அரசு அதனை அனுமதிக்காது. தமிழகத்தில் ரூ.2.5 லட்சம் கோடி ரூபாய் சாலை வசதிக்காக மத்திய அரசு முதலீடு செய்கிறது.
இன்று மாநில ஆட்சியில் இருக்கும் கட்சி, அரசியலுக்காக இவற்றை செய்ய விடாது. என்றாலும் தடைகளை தாண்டி தமிழகத்திற்கு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியே தீரும். மத்திய அரசின் முயற்சியால் தமிழக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. வளர்ச்சி குறித்த எனது கோட்பாட்டை வெளியிட தமிழக அரசு விரும்புவதில்லை.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்
கனிமொழி பெயரை தவிர்த்த பிரதமர்
தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ. 17000 கோடி திட்டங்கள் துவக்க விழாவில் மத்திய அமைச்சர்கள், கவர்னர் பெயரை மோடி குறிப்பிட்டார். தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, கனிமொழி எம்.பி., பெயரை குறிப்பிடாமல் பதவியை மட்டும் குறிப்பிட்டார்.
'டார்ச் லைட்' அடித்த தொண்டர்கள்!
'
உங்கள் கொண்டாட்டமும், உற்சாகமும் நாடு முழுவதும் பரவ மொபைல் டார்ச் அடிக்க வேண்டும் என்று மோடி கூறியதும் பா.ஜ., தொண்டர்கள் மொபைல் போன் டார்ச் அடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
வாசகர் கருத்து