"அகிலேஷ், என்னை அவமதித்துவிட்டார்" -புதிய கட்சி தொடங்கிய சுவாமி பிரசாத் மவுரியா
சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகிய சுவாமி பிரசாத் மவுரியா, தற்போது புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். முன்னதாக, சமாஜ்வாதி கட்சியின் அடிப்படை உறுப்பினர், எம்.எல்.சி ஆகிய பதவிகளை ராஜினாமா செய்தார்.
சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக சுவாமி பிரசாத் மவுரியா பதவி வகித்து வந்தார். அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மீதா அதிருப்தி காரணமாக கடந்த பிப்.,13ம் தேதி பதவி விலகினார். அடுத்து, பா.ஜ.,வில் இணைவார் என ஒரு தரப்பும் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என இன்னொரு தரப்பும் பேசி வந்தது.
ஆனால், ராஷ்ட்ரிய ஷோஹசித் சமாஜ் (தேசிய ஒதுக்கப்பட்ட சமூகம்) என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். புதிய கட்சியின் கூட்டம், பிப்.,22 அன்று டெல்லியில் நடைபெறும் எனவும் சுவாமி பிரசாத் மவுரியா அறிவித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகியது குறித்துப் பேசியுள்ள சுவாமி பிரசாத் மவுரியா, "சமாஜ்வாதி கட்சியின் வளர்ச்சிக்கு என்னுடைய பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. 2016ம் ஆண்டு 44 எம்.எல்.ஏ.,க்கள்தான் அக்கட்சிக்கு இருந்தனர். ஆனால், 2022ல் 111 ஆக உயர்ந்தது. அக்கட்சியின் வாக்குகளும் ஆறு சதவீதம் உயர்ந்தது. இவ்வளவு உழைத்தும் அகிலேஷ் என்னை அவமதித்துவிட்டார். தேசிய அரசியலில் சமாஜ்வாதி கட்சி என்ற ஒன்று இல்லாமலே போய்விட்டது" என்றார்.
அதேநேரம், சுவாமி பிரசாத் மவுரியாவை சமாதானம் செய்யும் முயற்சிகளில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த நிர்வாகிகள் இறங்கியுள்ளனர். ஆனால், இந்த சமாதான முயற்சிகள் எதுவும் எடுபடவில்லை.
யார் இந்த சுவாமி பிரசாத் மவுரியா?
உத்தரபிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் முக்கிய தலைவராக சுவாமி பிரசாத் மவுரியா பார்க்கப்படுகிறார். பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்பின்னர், 2016ல் பா.ஜ.,வில் இணைந்த மவுரியாவுக்கு யோகியின் அமைச்சரவையில் இடம் பிடித்தார். 2022ல் பா.ஜ.,வில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். தற்போது புதிய கட்சியை தொடங்கியிருப்பது, சமாஜ்வாதி கட்சிக்குப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து