"370 தொகுதிகளில் வெற்றி இலக்கு" - பிரதமர் மோடி பேச்சு

ஜம்மு: லோக்சபா தேர்தலில் 370 தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜ., இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் மோடி பேசினார்.

காஷ்மீர் மாநிலம், ஜம்முவில் நடந்த அரசு விழாவில் 25 மத்திய பள்ளிகள், 19 நவோதயா வித்யாலயா, 12 மத்திய பல்கலைக்கழகங்கள், 10 ஐ.ஐ,டி.க்கள், 4 என்.ஐ.டி.க்கள் உள்பட ரூ.30,500 கோடி மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களை துவக்கி வைப்பதற்கும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டவும் பிரதமர் மோடி வந்திருந்தார். அப்போது, சங்கல்தான் என்ற இடத்தில் இருந்து பாரமுல்லா வரையிலான மின்சார ரயில் சேவையையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். காஷ்மீரில் இயக்கப்படும் முதல் மின்சார ரயில் இது.

தொடர்ந்து, மத்திய அரசின் திட்டங்களில் பலன் அடைந்தவர்களுடன் மோடி கலந்துரையாடினார். இதன்பிறகு நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த காலங்களில் வாரிசு அரசியலால் காஷ்மீர் பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போயை அரசு, மக்களுக்கும் இளைஞர்களுக்கும் சேவை செய்கிறது. குடும்பத்திற்கு அல்ல. வாரிசு அரசியலையும் ஊழலையும் காஷ்மீர் இளைஞர்கள் நிராகரித்து உள்ளனர். வாரிசு அரசியல்வாதிகள், அவர்களுக்கும், குடும்பத்தினருக்கு மட்டுமே சேவை செய்தனர்.

வளர்ச்சியடைந்த காஷ்மீர் என்பது விரைவில் நிஜமாகும். முன்பு காஷ்மீர் பற்றி தவறான செய்திகள் மட்டுமே வெளிவந்தன. ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் மூலம் மாநிலம் பலன் பெற்றுள்ளது. காஷ்மீர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். மாநிலம் தற்போது வளர்ச்சி பெற்று வருகிறது.

காஷ்மீரில் 12 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டு உள்ளன. காஷ்மீருக்கு சிறப்பு சட்டம் 370 மாநிலத்திற்கு பெரிய தடையாக இருந்தது. மாநிலம் வளர்ச்சி பெற, அந்த சட்டத்தை பாஜ., அரசு நீக்கியது. தற்போது காஷ்மீரின் உண்மையான முகத்தை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர். பெண்கள் வளர்ச்சியடைந்து உள்ளனர். 370 சட்டம் நீக்கத்திற்கு பிறகு 370 தொகுதிகளுக்கு பாஜ., இலக்கு நிர்ணயித்து உள்ளது.

ராணுவ வீரர்களை காங்கிரஸ் அவமதித்தது. ஆனால், ராணுவ வீரர்களின் ஒரே பதவி ஒரே பென்சன் திட்டத்தை அமல்படுத்தினோம். காஷ்மீரில் ஓபிசி பிரிவினருக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மற்ற மாநிலங்களுடன் காஷ்மீரை இணைப்பு ஏற்படுத்தி வருகிறோம்.

காஷ்மீருக்கு வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் காஷ்மீருக்கு வந்துள்ளனர். இந்தியாவை 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற்றி உள்ளோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்