சண்டிகர் மேயர் தேர்தல்: 'ஆம் ஆத்மிக்கே வெற்றி' -சுப்ரீம் கோர்ட்டில் என்ன நடந்தது?

சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட முடிவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், ஆம் ஆத்மி வெற்றி பெற்றதாக உத்தரவை பிறப்பித்துள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைவநராக சண்டிகரில் மாநகராட்சி மேயர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் எட்டு ஓட்டுகள் செல்லாது என அறிவித்த தேர்தல் அதிகாரி, பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
தேர்தல் அதிகாரியின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்தது. அப்போது தேர்தல் அதிகாரியின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனத்தை நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் அதிகாரி அனில் மாஷி ஆஜர் ஆனார். அவரிடம், நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர்.
இதையடுத்து, இன்று (பிப்.,(20) சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான வீடியோ காட்சிகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் திரையிடப்பட்டது. இதன்பிறகு, சண்டிகர் மேயர் தேர்தல் முடிவுகளை சட்டவிரோதம் எனக் கூறி ரத்து செய்த நீதிபதிகள், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்ட குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
மேலும், 'தேர்தல் அதிகாரியால் செல்லாது என அறிவிக்கப்பட்ட வாக்குகள் அனைத்தும் செல்லும். அவை ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக பதிவானவை' எனக் குறிப்பிட்டனர். இந்த தேர்தலில் தேர்தலை நடத்திய அதிகாரி சட்டவிரோதமாக நடந்து கொண்டு, வாக்குச் சீட்டில் முறைகேடு செய்ததையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.
வாசகர் கருத்து