தே.ஜ., கூட்டணி அமைக்க பழனிசாமியுடன் வாசன் பேச்சு

- நமது நிருபர் -
தி.மு.க., கூட்டணியை வீழ்த்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடன் த.மா.கா., தலைவர் வாசன் நடத்திய சமரச பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிகிறது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின், 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு பொதுக்கூட்டம், பல்லடத்தில், வரும் 27ம் தேதி நடக்கவுள்ளது. அந்த மேடையில், தி.மு.க., அணியை எதிர்க்கும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை ஏற்றி, தேர்தல் பிரசார கூட்டமாக நடத்த, தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்கும் இக்கூட்டத்திற்கு வரும்படி, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, த.மா.கா., தலைவர் வாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பா.ம.க., தலைவர் அன்புமணி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா ஆகியோரையும் அழைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த தலைவர்களுடன் பா.ஜ., நடத்தும் பேச்சு முடிவடையும் பட்சத்தில், அவர்களும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை, அவரது சென்னை வீட்டில் நேற்று வாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, 40 நிமிடங்கள் நீடித்தது.
நாட்டின் நலன் கருதியும், எதிரியை வீழ்த்தும் அடிப்படையிலும், தமிழகத்தில் மெகா கூட்டணி அமைக்க, மீண்டும் அ.தி.மு.க., - பா.ஜ., கைகோர்க்க வேண்டும் என, பழனிசாமியிடம் வாசன் வலியுறுத்தி உள்ளார். ஆனால், பழனிசாமி தரப்பில் பிடி கொடுக்கவில்லை என, த.மா.கா.,வினர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து