Advertisement

வேட்பாளர் உடல்தகுதி சான்று கோரலாமா? -தேர்தல் கமிஷன் விளக்கம் தர உத்தரவு

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம், உடல்தகுதிச் சான்று கோர முடியுமா என, தேர்தல் கமிஷன் விளக்கம் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், 2016ல் கோவையைச் சேர்ந்த சுப்பையா என்பவர் வழக்கு தொடர்ந்தார். மனுவில், 'தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, சொத்து, குற்ற வழக்குகள் பற்றிய விபரங்களுடன், 30 நாட்களுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை அறிக்கையையும் சேர்த்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய, தேர்தல் கமிஷன் அறிவுறுத்த உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.

வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தேர்தல் கமிஷன் சார்பில், வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் ஆஜராகி, ''வேட்பாளர்கள் உடல்நலம் குறித்த பரிசோதனை அறிக்கை என்பது, சம்பந்தப்பட்ட நபர்களின் தனிப்பட்ட அந்தரங்க விஷயம்; அவற்றைக் கேட்க முடியாது. இது தொடர்பாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவ அறிக்கையை கோர வேண்டுமெனில், சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்,'' என்றார்.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் புருஷோத்தமன் ஆஜராகி, ''தேர்ந்தெடுக்கும் பிரதிநிதியின் உடல் நிலையை அறிந்து கொள்ள, வாக்காளருக்கு உரிமை உள்ளது. மருத்துவக் காப்பீடு பெற மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை அளிக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஏன் வலியுறுத்தக்கூடாது,'' என்றார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 'வேட்பாளருக்கு இருக்கும் நோய்கள் பற்றி தெரிவிக்கும்படி வற்புறுத்த முடியாது. அரசியல் சாசன பதவிகளை வகிப்பவர்கள், உடற்தகுதி சான்று சமர்ப்பிக்க வேண்டியுள்ளது என்பதால், வேட்பாளர்கள் தங்கள் கடமையை ஆற்றுவதற்கான உடல்தகுதியை பெற்றுள்ளனரா என்பது குறித்த சான்றை பெறலாம்.

இருப்பினும், உடல்தகுதிச் சான்றை சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா என்பது குறித்து, தேர்தல் கமிஷன் விளக்கம் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை மார்ச், 13க்கு தள்ளிவைத்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்