பா.ஜ.,வில் இணைந்த காஷ்மீர் முன்னாள் அமைச்சர்
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் அமைச்சரும், பஹாரி சமுதாய தலைவருமான முஸ்தாக் அகமது புஹாரி நேற்று பா.ஜ.,வில் இணைந்தார்.
ஜம்மு - காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் போட்டியிட்டு இரு முறை எம்.எல்.ஏ.,வாகவும், அமைச்சராகவும் பதவி வகித்தவர் முஸ்தாக் அகமது புஹாரி. பஹாரி இனத்தவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவுக்கும், இவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, கடந்த 2022 பிப்ரவரியில் இவர் அக்கட்சியில் இருந்து விலகினார்.
பின், 'பஹாரி மொழி பேசும் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் கட்சிக்கு ஆதரவு தர தயங்க மாட்டேன்' என, அறிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய பா.ஜ., அரசு சமீபத்தில் பஹாரி இனக் குழு, காடா பிராமின், பாதாரி, கோலி ஆகிய நான்கு ஜாதிகளை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தது.
இதையடுத்து, முஸ்தாக் அகமது புஹாரி நேற்று காஷ்மீர் மாநில பா.ஜ., தலைவர் ரவீந்தர் ரெய்னா முன்னிலையில், தன் ஆதரவாளர்களுடன் பா.ஜ.,வில் இணைந்தார். அவருடன் முன்னாள் அரசு அதிகாரி கவாஜா, ஓய்வுபெற்ற போலீஸ் எஸ்.பி., ஷபீர் கிலானி ஆகியோரும் பா.ஜ.,வில் இணைந்தனர்.
''வரும் நாட்களில், ஜம்மு -- காஷ்மீரில் இருந்து பல அரசியல் பிரமுகர்கள் பா.ஜ.,வில் இணைவர்,'' என, அக்கட்சியின் மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறினார்.
வாசகர் கருத்து