ராமர் கோயில் - ஜம்மு காஷ்மீர் - சீன ஆக்ரமிப்பு: 'நியூஸ் வீக்' பேட்டியில் மனம் திறந்த மோடி
"பல நூற்றாண்டுகளாக ராம் லல்லாவின் வருகையைக் காண இந்திய மக்கள் காத்திருந்தனர். அதன் கும்பாபிஷேக விழாவானது, இரண்டாவது தீபாவளியாக தேசத்தை ஒன்றிணைத்தது" என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 'நியூஸ் வீக்' பத்திரிகைக்கு பிரதமர் மோடி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தியா சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். இவை உடனே தீர்க்கப்பட வேண்டும். அப்போது தான் இரு நாட்டுக்கும் இடையே இயல்பான தொடர்புகள் இருக்கும்.
இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான உறவு நீடிப்பது என்பது ஆசிய துணைக்கண்டத்துக்கும் உலகத்துக்கும் முக்கியமான ஒன்று. இரு தரப்புக்கும் இடையே ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மூலம் எல்லைகளில் அமைதியை மீட்டெடுக்க முடியும் என்று நம்புகிறேன்.
பாகிஸ்தானை பொறுத்தவரை அந்நாட்டின் புதிய பிரதமருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். அந்நாட்டின் முன்னாள் இம்ரான் கான் கைது குறித்தோ அந்நாட்டின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது.
ஜம்மு காஷ்மீர் குறித்து நான் அல்லது மற்றவர்கள் சொல்வதை நம்பாமல் அங்கு ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றங்களை நேரில் சென்று பாருங்கள். கடந்த மாதம் அம்மாநிலத்துக்கு நான் சென்றபோது, தங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை அம்மக்கள் பெற்றிருப்பதை காண முடிந்தது.
கடந்த 2023ல் மட்டும் 21 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு வந்துள்ளனர். தற்போது அங்கு பயங்கரவாத சம்பவங்களும் குறைந்துள்ளன.
(ராமர் குறித்த கேள்வியும் பிரதமரின் பதிலும்) இந்த தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பகவான் ராமரின் பெயரே எதிரொலிக்கிறது. ராமர் கோயில் திறப்புக்கு முன் 11 நாள்கள் சிறப்பு விரதம் இருந்தேன்.
அந்த காலகட்டத்தில் ராமரின் பாதம் பதிந்த இடங்களுக்கு யாத்திரை சென்றேன். பல நூற்றாண்டுகளாக தொடர்ந்த விடாமுயற்சி மற்றும் தியாகத்தின் உச்சமாக ராமர் கோயில் உள்ளது. தான் பிறந்த இடத்துக்கே ராமர் திரும்பியது என்பது நாட்டின் ஒற்றுமையின் வரலாற்று சிறப்புமிக்க தருணம்.
பல நூற்றாண்டுகளாக ராம் லல்லாவின் வருகையைக் காண இந்திய மக்கள் காத்திருந்தனர். அதன் கும்பாபிஷேக விழாவானது, இரண்டாவது தீபாவளியாக தேசத்தை ஒன்றிணைத்தது.
140 கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக கும்பாபிஷேக விழாவை என்னால் அனுபவிக்க முடிந்தது. அதை கடவுளின் ஆசிர்வாதமாக பார்க்கிறேன்.
இவ்வாறு அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து