தமிழகம் என்ன பறவைகள் சரணாலயமா : பிரதமரை சாடிய ஸ்டாலின்
"தி.மு.க., அரசு பக்தர்கள் போற்றும் அரசாக உள்ளது. மக்களை பண்படுத்தத் தான் ஆன்மிகமே தவிர பா.ஜ., போல் மக்களை பிளவுபடுத்த பயன்படுத்தக் கூடாது" என, முதல்வர் ஸ்டாலின் பேசினார். மதுரை தொகுதி மா.கம்யூ., வேட்பாளர் சு.வெங்கடேசன் மற்றும் சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது:
10 ஆண்டுகாலமாக தமிழக மக்களை மதித்து எந்த சிறப்பு திட்டத்தையும் செய்து கொடுக்காத மோடி, ஓட்டு கேட்டு மட்டும் வருகிறார். வெள்ளத்தில் தவித்த மக்களுக்கு உதவிகளை செய்துவிட்டு அவர் வரவில்லை.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கிறார். கேரளாவில் மக்கள் நல திட்டங்களுக்கு கடன் வாங்கக் கூட சுப்ரீம் கோர்ட் போகும் நிலையை ஏற்படுத்தினார். கர்நாடக அரசு வறட்சி நிவாரணம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. மேற்கு வங்கத்துக்கும் இதே நிலைமை தான்.
மகாராஷ்ட்ராவில் குதிரை பேரம் நடத்தி எம்,எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கினார். அங்கு ஆளும்கட்சியை உடைத்து அந்த மாநிலத்தையே நாசமாக்கிவிட்டார். ஜார்க்கண்டில் பழங்குடி முதல்வரான ஹேமந்த் சோரனை கைது செய்தார். பஞ்சாப்பிலும் டில்லியிலும் கவர்னர்கள் மூலம் தொல்லை கொடுக்கிறார்.
டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்தார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஐ.டி, ஈ.டி, சி.பி.ஐ., மூலம் தொல்லை கொடுப்பார். இது தான் மோடியின் இந்தியா.
'2019ல் நடந்த புல்வாமா தாக்குதலை அரசியல் ஆதாயத்துக்காக எப்படி பயன்படுத்தினார்' என்பதை கவர்னராக இருந்த சத்யபால் மாலிக் வெளிப்படுத்தினார். உடனே அவர் வீட்டில் சி.பி.ஐ ரெய்டை நடத்தினர்.
பெண்கள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பேசும் பிரதமர், பா.ஜ., எம்.பி., பிரிஜ்பூசன் சிங்கால் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் விட்டபோது எதுவும் பேசவில்லை.
மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நேரில் சென்று மோடி ஆறுதல் சொன்னாரா. இப்படிப்பட்ட காட்டாட்சி தான் பா.ஜ., 'பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது' என உ.பி., முதல்வர் யோகி பேசினார்.
ஒரு தாய் மக்களாக வாழும் மண்ணில் மதவெறியை தூண்டிவிடுகிறது, பா.ஜ., மதவெறியின் வன்முறைகளையும் கொலைகளையும் தாராளமயமாக்கியவர், மோடி. இப்படிப்பட்டவரை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.
இப்போது, 'தமிழகத்துக்கான வளர்ச்சி திட்டங்களை நாங்கள் தடுத்தோம்' என்கிறோர். இது எவ்வளவு பெரிய பொய். தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பா.ஜ., செய்தவற்றை பட்டியல் போடலாமா?
தென்மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்காக தொடங்கப்பட்ட சேது சமுத்திர திட்டத்தை இதுவரையில் முடக்கி வைத்துள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட கட்டித் தராமல் உள்ளனர். ஆனால், பா.ஜ., ஆளும் மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.
பேரிடர் நிதியைக் கூட கொடுக்கால் மக்களுக்கு தமிழக அரசு கொடுத்த நிதியை நிர்மலா சீதாராமன் ஏளனம் பேசுகிறார். இந்த லட்சணத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்ன செய்தது எனக் கேட்கிறார். எங்களின் பட்டியலை சொல்வதற்கு ஒருநாள் தேவைப்படும்.
நாடு முழுக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் 70,000 கோடிக்கு மேல் கல்விக்கடன் வழங்கப்பட்டது. தமிழை செம்மொழியாக அறிவித்தோம். திருச்சி, கோவை விமான நிலையங்களை விரிவாக்கம் செய்தோம். மத்திய அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்தபோது 54,644 கோடிக்கு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றினோம்.
பிரதமர் மோடியால் இப்படி பட்டியல் போட முடியுமா. தேர்தலுக்கு வருவதற்கு தமிழகம் என்ன பறவைகள் சரணாலயமா. தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா. ஏன் இந்த ஓரவஞ்சனை?
கடந்த 3 ஆண்டுகளில் ஏராளமான சாதனைகளை செய்து கொடுத்த பெருமையோடு வந்து ஓட்டு கேட்கிறோம். மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு மைதானம், கருணாநிதி நூலகம், கீழடி ஆய்வுக்கான தடைகளை உடைத்து அருங்காட்சியகம் என பலவற்றை கொண்டு வந்துள்ளோம்.
தி.மு.க., அரசு பக்தர்கள் போற்றும் அரசாக உள்ளது. மக்களை பண்படுத்தத் தான் ஆன்மிகமே தவிர பா.ஜ., போல் மக்களை பிளவுபடுத்த பயன்படுத்தக் கூடாது. நம் நாட்டை 100 ஆண்டுகள் பின்னோக்கி பா.ஜ., இழுத்துச் சென்றுவிட்டது.
தி.மு.க.,வின் பல வாக்குறுதிகள் காங்கிரசின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளன. குஜராத் மாடல் என்ற போலி போட்டோஷாப்பை அடித்து நொறுக்கிவிட்டோம். தமிழகத்தைப் பற்றி வடமாநிலத்திலும் பேசி ஆதாயம் தேட மோடி முயற்சி செய்கிறார்.
2019 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் 99 சதவீதத்தை நிறைவேற்றியதாக கூறும் மோடி, கருப்புப் பணத்தை மீட்டுவிட்டாரா. ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை என 20 கோடிப் பேருக்கு வேலை கொடுத்தாரா. குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வந்துவிட்டதா. பெண்களுக்கான நடமாடும் வங்கி எங்காவது நடமாடியதை பார்த்தீர்களா?
ஐ.டி., ஈ.டி, சி.பி.ஐ., ஆகியவற்றை பா.ஜ.,வின் துணை அமைப்புகளாக மாற்றிவிட்டனர். 'தமிழ் பிடிக்கும்' எனக் கூறிவிட்டு 74 கோடி ரூபாயை மட்டும் தமிழுக்காக ஒதுக்கிவிட்டு, சம்ஸ்கிருதத்துக்கு 1488 கோடி ரூபாயை ஒதுக்கியது ஏன்?
தமிழின் சிறப்புகளை சொன்ன கால்டுவெல், ஜி.யூ.போப்பை கவர்னர் ரவி இழிவுபடுத்தியதை மோடி கண்டிக்கவில்லை. தமிழுக்கும் தமிழகத்துக்கும் இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு துணையாக இருந்தவர் பழனிசாமி. இந்த தேர்தலில் ஓட்டுகளைப் பிரித்து பா.ஜ.,வின் பி டீமாக வந்திருக்கிறார்.
எங்காவது பா.ஜ.,வையோ மோடியையோ எதிர்த்து அவர் பேசுகிறாரா. தமிழகத்துக்கு அவரால் கிடைத்த நன்மை எதுவும் இருக்கிறதா. தன்னைச் சுற்றி இருந்த அத்துணை பேரின் முதுகிலும் குத்தியவர் தான் அவர்.
இப்போது அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து போனவர்கள் பா.ஜ.,வுடன் நேரடி கூட்டணியாகவும் இவர் மறைமுக கூட்டணியாகவும் உள்ளனர். தமிழகத்தை வஞ்சித்த பா.ஜ.,வையும் தமிழகத்தைப் பாழ்படுத்திய அ.தி.மு.க.,வையும் இந்த தேர்தலில் ஒருசேர வீழ்த்த வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
வாசகர் கருத்து